வங்கதேச அகதிகள் முகாமில் தங்கியுள்ள ரோஹிங்ய குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதாக ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
மியான்மரின் ராகினே மாகாணத்தில் வசித்த வந்த ரோஹிங்ய இன இஸ்லாமியர்கள் மீது, அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் வாழ்வாதாரத்தை தேடி சுமார் 7 லட்சம் பேர் வங்கதேசத்தில் அகதிகளாக குடிபெயர்ந்துள்ளனர். சர்வதேச நாடுகளின் தலையீடு காரணமாக அவர்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு மியான்மர் அரசு முன்வந்துள்ளது. இந்நிலையில் அகதிகள் முகாமில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள், வெள்ளம் மற்றும் நோயால் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
அவர்களை காப்பாற்றுவதற்கு போதிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ரோஹிங்ய இன இஸ்லாமியர்களின் ஒரு தலைமுறையே அழியும் ஆபத்து ஏற்படலாம் என்றும் யுனிசெப் நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும் குழந்தைகளை நோயில் இருந்து காப்பாற்றி, அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க, போதிய கல்வியறிவு புகட்ட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வங்கதேச அகதிகள் முகாமில் தற்போது 6 லட்சம் பேர் வரை வசித்து வருவதாகவும், அவர்களில் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.