பிரேசில் நாட்டில் கோவிட்-19 வார்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளியை ஆறுதல்படுத்துவதற்காக, கையுறைகளில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி நோயாளியின் கைகளை பற்றிக்கொள்வது போல செய்த செவிலியரின் செயல் வைரலாகி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
பிரேசில் நாட்டில் கோவிட் -19 பாதிப்புகளின் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாட்டின் சுகாதாரத்துறை கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் கடுமையான கோரோனா தாக்குதலில் சிக்கி தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு, ‘அக்கறையுள்ள மனித தொடுதலை’ உருவாக்கும் வகையில் செயல்பட்ட ஒரு செவிலியரின் புதிய யோசனை உலகம் முழுவதும் பாராட்டைப்பெற்று வருகிறது.
பிரேசில் நாட்டை சேர்ந்த செமி அராஜோ குன்ஹா என்ற செவிலியர் , தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு ஆறுதல் கூறும் விதமாக, வெதுவெதுப்பான நீர் நிரப்பப்பட்ட இரு கையுறைகள் நோயாளிகளின் கைகளை பற்றியிருப்பது போல செய்திருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. செவிலியரின் கருணைமிகு செயலுக்கு மக்கள் நன்றி சொல்லிவருகிறார்கள்.