மணிப்பூரில் மெய்தி சமூக மக்களுக்கும் குக்கி சமூக மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் முதல் ஏற்பட்ட மோதல், தொடர் வன்முறை சம்பவங்களுக்கு வழிவகுத்து வருகிறது. இதில் தற்போது வரை 120-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் 5,000 வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாகவும் அம்மாநில அரசே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கலவரங்களும் மக்களிடையே நிகழும் மோதல்களும் முடிவுக்கு வராத நிலையில் மெய்தி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் கடந்த மே 4-ம் தேதியே நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில், வீடியோவில் காணப்படும் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கும் ஆட்படுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த அதிர்ச்சியிலிருந்தே இந்தியா மீளாத நிலையில், இந்த வன்முறை எதனால் ஏற்பட்டது என்பதுபற்றி காரணமொன்று சொல்லப்படுகிறது. அதன்படி கடந்த மே 3 ஆம் தேதி ஒரு இளம்பெண்ணின் உடல், பாலீத்தீன் கவர்களால் சுற்றப்பட்டு சுராசந்த்பூரில் வீசப்பட்டிருந்ததாக புகைப்படமொன்று இணையத்தில் வேகமாக பரவியது. அத்துடன் அப்பெண் மெய்தி இனத்தை சேர்ந்த மருத்துவ மாணவி என்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு - கொலை செய்யப்பட்டு - கவரில் சுற்றப்பட்டு வீசப்படிருக்கலாம் என்றும் தகவல் பரவியது.
இருப்பினும் அப்பெண் மெய்தி இனப்பெண் என்பதை மணிப்பூர் காவல்துறையினர் அப்போதே மறுத்தனர். அப்போதைய காவல்துறை விசாரணையில், புகைப்படத்தில் இருந்தவர் டெல்லி மாணவி என்றும் அவர் தனது பெற்றோரால் கடந்த 2022-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.
ஆனால் காவல்துறையினரின் அந்த விளக்கம் மக்களிடம் சேர்வதற்குள், போலி செய்தி வேகமாக பரவியது. அதை நம்பியே, பழி என்ற பெயரில் மெய்தி கும்பல்களால் குக்கி சமூகத்தை சேர்ந்த பெண்கள் இருவர் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.
போலி செய்தி ஒன்றை வைத்துக்கொண்டு, இந்தளவுக்கு மோசமான வன்முறை நடந்திருப்பது, அதிர்ச்சி மேல் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைவதாக கூறுகின்றனர் செயற்பாட்டாளர்கள். சோகம் என்னவெனில், இப்படி பல போலி செய்திகள், மணிப்பூர் மக்களின் உணர்வெழுச்சியை அதிகப்படுத்தி அவர்களை வன்முறைக்கு தூண்டுவதாக தெரிகிறது.
’தி பிரிண்ட்’ இணையதளம் ஜூலை 12-ம் தேதி களத்திலிருந்து பதிவுசெய்த மற்றொரு தகவலின்படி, குக்கி சமூகத்தைச் சேர்ந்த 6 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என தெரிகிறது. அவர்களில் 40 வயது பெண்ணொருவர், கல்லூரி படிப்பை பாதியில் இடைநிறுத்திய மாணவி ஒருவர், பதின்ம வயதுப் பெண் ஒருவர், மருத்துவ மாணவியொருவர், கார் பழுது பார்க்கும் இடங்களில் பணிபுரிந்த இரு இளம் பெண்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் வேலை பார்க்கும் இடங்களில் பாதிக்கப்பட்ட இரு இளம் பெண்களின் குடும்பத்தார் மட்டும் தங்கள் மகள் பாதிக்கப்பட்டது (பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றப் பிரிவுகளின்கீழ்) குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கப்பட்டது மருத்துவ சோதனைகளின் படி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து எந்தவித புகாரும் காவல்துறையினரால் பெறப்படவில்லையாம். ஒருவரைத் தவிர வேறெந்த பெண்ணும் புகாரும் அளிக்கவில்லையென சொல்லப்படுகிறது.
மணிப்பூர் காவல்துறைதுறையினர், ‘இதுபோன்ற பல சம்பவங்கள் குறித்து நாங்களும் கேள்விப்படுகிறோம். ஆனால் எங்களிடம் புகார் அளிக்கப்பட்டால் மட்டுமே, நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்’ என தெரிவிக்கின்றனர்.
காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டால் மட்டுமே, நீதிமன்றம் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் ஒருவேளை அப்பெண்கள் புகார் அளிக்காவிட்டால் இச்சம்பவமே நீர்த்துப்போகும் அபாயம் உள்ளதென எச்சரிக்கின்றனர் வழக்கறிஞர்கள். இந்த இடத்தில் அப்பெண்கள் ஏன் புகாரளிக்கவில்லை என்பதையே நாம் யோசிக்க வேண்டும்.
மிக மிக மோசமாக மனித தன்மையற்ற முறையில் பாதிக்கப்பட்டவர்கள், ‘நான் பாதிக்கப்பட்டேன்’ என்று புகாரளிக்கக்கூட மறுக்கும் அளவுக்கு அவர்களை தடுத்தது எது என்பதை அவர்கள் தரப்பில் நின்று நாம் உணரவேண்டியுள்ளது.
அப்படி என்ன காரணம் இருக்கமுடியும்? சமூகம் காலங்காலமாக பெண்களின் உடலின் மேல் கட்டமைத்த மனிதமற்ற புனிதம். ‘எங்கே இந்த சமூகம் என்னை மோசமான கண்ணோட்டத்தில் பார்க்குமோ, வார்த்தைகளால் கொச்சைப்படுத்துமோ, வாழ்வாதாரத்தையே கெடுக்குமோ’ என்று பயந்துதான் அப்பெண்கள் புகாரளிக்காமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதில் பாதிக்கப்பட்ட பெண்கள், இப்போது ஏதாவது ஒரு பாதுகாப்பு முகாமில் மனதளவிலும் உடலளவிலும் பாலியல் வன்கொடுமை ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீளமுடியாமல், உயிரையாவது காப்பாற்றிக்கொள்ளலாமென பேசமுடியாமல் தவிக்கின்றனர் என்கிறது அங்கு இயங்கும் ‘தி பிரிண்ட்’ செய்தித்தளம்.
இதில் இந்த 6 பெண்கள் பற்றி நமக்கு தெரிகிறது. நேற்று வெளியான வீடியோ மூலம் மேலும் 2 பெண்கள் பற்றி தெரிகிறது. ஆனால் தெரியாமல் இன்னும் இப்படி பல பெண்கள் சமூகத்தின் அருவருப்பான சாதி வெறிக்கும் இன வெறிக்கும் ஆணாதிக்க - சர்வாதிகார போக்குக்கும் மௌனம் காக்க வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு நம்பிக்கையளித்து, பாதுகாப்பை ஏற்படுத்துவது நிச்சயம் அரசின் கடமை மட்டுமே.
இவ்வளவு பிரச்னைகளுக்கும் இடையே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, “மணிப்பூர் சம்பவம் இந்தியர்களை அவமானப்பட வைத்துள்ளது. மணிப்பூர் பெண்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது. குற்றம் செய்தவர்கள் தப்ப முடியாது. அனைத்து முதலமைச்சர்களும் பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
காவல்துறை தரப்பில் புகாரளிக்கப்பட்ட குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதை போலவே, அளிக்கப்படாத புகார்களில் நீதிமன்றங்கள் தாமாக முன் வந்து வழக்கை விசாரணை செய்வது போல் காவல்துறையும் தானாக முன் வந்து சில விஷயங்களில் வழக்குகளை பதிவு செய்து விசாரிக்கலாம். அதில் சில சாதக பாதகங்கள் இருக்கலாம். அதை நெறிப்படுத்த வேண்டியது அவசியம். எப்படியாகினும் பெருந்திரளான மக்கள் அல்லது ஒரு சமூகம் பாதிக்கப்படும் போது இது போன்ற ஒரு நடவடிக்கை அவசியமாகிறது. அதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா என்று பார்ப்போம்.