‘நிர்வாணம் ஆபாசமல்ல’ முதல் ‘பாலியல் தொழிலாளியின் குழந்தையும் கண்ணியத்தோடு நடத்தப்படணும்’ வரை! கடந்த ஒரு மாதத்தில் இந்திய நீதிமன்றங்கள் கொடுத்த முக்கியமான மூன்று தீர்ப்புகள், இங்கே:
நேற்று கேரள உயர்நீதிமன்றத்தில் போக்சோ வழக்கொன்றின் மேல்முறையீட்டில், “நிர்வாணம் மற்றும் அருவருப்பு / ஆபாசம் - இவை இரண்டும் ஒரேமாதிரியான பொருள் கொண்டவை அல்ல” என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விவரம்: ரெஹானா பாத்திமா என்ற சமூக ஆர்வலர், ஜூன் 2020 இல் தனது இரண்டு மைனர் குழந்தைகள் (14 வயது சிறுவன் மற்றும் 8 வயது சிறுமி) தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய அனுமதித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை ‘Body Art and Politics’ என்பதன் கீழ் தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டிருந்தார் ரெஹானா பாத்திமா. அச்செயலை போக்சோ சட்டம், சிறார் நீதிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கொச்சி காவல்துறை வழக்கு பதிந்தது. அந்த வழக்கு விசாரணையின் முடிவில் 2022 மே மாதத்தில், ரெஹானாவின் செயலை குற்றமென தீர்ப்பளித்தது போக்சோ நீதிமன்றம்.
அதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில், 33 வயதான ரெஹானா பாத்திமா மேல்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில்தான் நிர்வாணம் அருவருபல்ல / ஆபாசமல்ல என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது கேரள உயர்நீதிமன்றம்.
இதுதொடர்பாக தீர்ப்பளித்த நீதிபதி கௌசெர், தனது தீர்ப்பில் “நிர்வாணத்தை ஆபாசமான அல்லது அநாகரீகமான அல்லது ஒழுக்கக்கேடானதாக வகைப்படுத்துவது தவறு. ஆண் உடல் சார்ந்த விஷயங்கள், மிக அரிதாகவே கேள்விக்குள்ளாக்கப்படும் அதே வேளையில், பெண்களின் விஷயங்கள் மட்டும் இந்த ஆணாதிக்கக் கட்டமைப்பில் தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. பெண்ணின் நிர்வாணம் தடைசெய்யப்பட்டதாகவே சமூகத்தில் கருதப்படுகிறது, ஏனெனில் நிர்வாணமான பெண்ணின் உடலென்பது சிற்றின்ப நோக்கங்களுக்காக மட்டுமே பார்க்கப்படுகிறது. உண்மையில் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, ஒரு நபரின் நிர்வாண உடலின் மேல் ஓவியம் வரைவது வெளிப்படையான பாலியல் செயல் என்று கூற முடியாது.
போலவே ஒரு பெண்ணின் நிர்வாண உடலை சித்தரிப்பது ஆபாசமானதாகவோ, அநாகரீகமாகவோ அல்லது பாலியல் ரீதியாக வெளிப்படையானதாகவோ கருதப்படக்கூடாது. ஆண்கள் தங்களின் உடலை சிக்ஸ்-பேக் வைத்திருப்பதாகவோ, பைசெப்ஸ் எடுப்பதாகவோ கூறி வெளிப்படையாக காட்டிக்கொண்டிருக்கிறார்கள். பல நேரங்களில் சட்டையில்லாமல் ஆண்கள் செல்வதை காணமுடிகிறது. அது எதுவுமே ஆபாசமானதாகவோ ஒழுக்கக்கேடாகவோ பார்க்கப்படுவதில்லை.
இவ்விஷயத்தில் அச்சமூக ஆர்வலரின் வீடியோ, சமூகத்தில் நிலவும் இந்த இரட்டைத் தரத்தை அம்பலப்படுத்துவதுடன், நிர்வாண உடலென்பது ‘பாலியல் தேவைகளை கடந்து மற்றொரு பார்வையை கொண்டது’ என அக்குழந்தைகளுக்குக் கற்பிக்கவும் செய்யும்” என்று கூறியிருக்கிறார்.
இந்த தீர்ப்பு, போக்சோ தொடர்பான தீர்ப்புகளிலும், பெண் உடல் மீதான நீதிமன்ற உத்தரவுகளிலும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த நேரத்தில் கடந்த மாத இறுதியில், மும்பை நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பையும் நாம் குறிப்பிட வேண்டியுள்ளது. அதன்படி “பாலியல் வேலை செய்வதென்பது குற்றம் அல்ல; எந்த காரணமும் இல்லாமல் வயதுவந்த பாலியல் தொழிலாளியை காவலில் வைப்பதுதான் பிரிவு 19 இன் கீழ் அடிப்படை உரிமைகளை மீறுகிறது" என்று கூறியது.
மேலும் “எனில் எது குற்றமென்றால், பொது இடத்தில் மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில், பாலியல் தொழிலில் ஈடுபடுவதை, குற்றமாக அழைக்கலாம். ஒருவேளை பாதிக்கப்பட்ட பெண் அவரது விருப்பத்திற்கு மாறாக இச்செயலில் யாராலாவது ஈடுபடுத்தப்பட்டால், அது நிச்சயமாக இந்தியா முழுவதும் பெண்கள் சுதந்திரமாக இருக்கும் உரிமையை குறைக்கிறது என்று பொருள்படும்.
இவ்விஷயத்தில் (இவ்வழக்கில்) சம்பந்தப்பட்ட பெண், கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்தப்படுத்தப் படவில்லை. அந்தப் பெண் ஒரு மேஜர் என்பதால், தன் சார்ந்த முடிவுகளை அவர் சொந்தமாக எடுக்கும் உரிமை அவருக்கு உள்ளது” என நீதிமன்றம் தெரிவித்தது. அப்பெண்ணை விடுவிக்கவும் செய்தது நீதிமன்றம்!
இதுபோல சிறப்பு நீதிமன்றமொன்று, மே மாதத்தில் வழங்கிய ஒரு தீர்ப்பில், பாலியல் தொழிலாளியின் 4 வயது குழந்தைக்கு, பாலியல் துன்புறுத்தல் கொடுத்த 38 வயது ஆணுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அத்தீர்ப்பில், ‘பாலியல் தொழிலாளியின் குழந்தைகளுக்கு, கண்ணியத்துடன் வாழ எல்லா உரிமையும் உள்ளது’ எனக்கூறியது நீதிமன்றம்.
இப்படியாக கடந்த ஒரு மாத காலத்துக்குள் குழந்தைகளை சுற்றி நிகழும் உடல் சார்ந்த வன்முறை, பாலியல் தொழிலாளிகள், அவர்தம் குழந்தைகள், அவர்கள் நலன் சார்ந்து என பல்வேறு முக்கியமான முடிவுகளை எடுத்து வருகின்றன இந்திய நீதிமன்றங்கள்.
பாலியல் தொழிலை ஆதரிப்பது, சரியா தவறா என்ற வாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், பாலியல் தொழில் செய்பவர்களை அடிப்படை மனிதத்துடன் நடத்துவது அவசியம்; அதிலும் அவர்தம் குழந்தைகள் முழுமையாக காக்கப்பட வேண்டும், மற்றும் பெண்ணின் உடலை பாலியல் சார்ந்து மட்டுமே பார்ப்பது தவறான போக்கு என்பதில் நீதிமன்றங்கள் உறுதியாக உள்ளன. பெண் நலன், குழந்தைகள் நலன் சார்ந்த இந்த தீர்ப்புகள், முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
- ஜெ.நிவேதா, E. சிவ பாரதி