உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில், கடந்த புதன்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பௌலிங்கை தேர்வு செய்ததை அடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து களமிளங்கிய இந்திய அணி துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 15 ரன்களுக்கும், சுப்மன் கில் 13 ரன்களுக்கும் விரைவாக ஆட்டமிழந்தனர். அதன்பிறகு வந்த புஜாரா மற்றும் விராட் கோலியும் தலா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். முதல் 4 வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
இந்நிலையில், தனது விக்கெட்டை இழந்ததும் நேராக பெவிலியன் சென்ற விராட் கோலி, இஷன் கிஷன் உள்ளிட்ட வீரர்களுடன் ஜாலியாக பேசிக் கொண்டே கையில் பிளேட்டை வைத்துக்கொண்டு உணவருந்திக் கொண்டிருந்தார். இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சில நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஐபிஎல்லில் அவுட்டாகும்போது, சோகமாக இருக்கும் விராட் கோலி, இந்திய அணிக்கு விளையாடும்போது அப்படி இல்லை என்றும், கடந்த 2003-ம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியின்போது, விரைவில் ஆட்டமிழந்ததால் சச்சின் டெண்டுல்கர் 3 நாட்களாக சாப்பிடவில்லை; ஆனால் விராட் கோலி 2023 உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விரைவாக ஆட்டமிழந்ததும்..’ என்று ஒப்பிட்டு கிண்டல் செய்து வந்தனர்.
விராட் கோலிக்கு அவுட் ஆவது பற்றியெல்லாம் கவலையில்லை, சாப்பாடுதான் முக்கியம் என்றவாறு விமர்சித்திருந்தனர். இந்நிலையில், இன்று 3-வது நாள் ஆட்டம் துவங்குவதற்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “நம்மை மற்றவர்களுக்கு பிடிக்காது போனாலும், அதை ஏற்றுக்கொள்ளும் திறமையை நாம் வளர்த்து கொள்ள வேண்டும். அப்போது தான் மற்றவர்களின் கருத்து சிறையில் இருந்து நீங்கள் விடுதலை பெற்று சுதந்திரமாக வாழ முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.