திரைப்பாடல்களின் பின்னணி இசையுடன் பாடல்பாடி பதிவு செய்ய உதவும் ஸ்மூல் என்ற செயலி மூலமாக, பெண்களிடம் நட்பாகப் பழகி நகை, பணம் பறித்த சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் பிரிவில், கல்லூரி மாணவி ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், ஸ்மூல் ஆப் மூலம் தனக்கு அறிமுகமாகி நட்பாகப் பழகிய நபர், தன்னைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, 17 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பதிமூன்றரை சவரன் நகைகளைப் பெற்று மோசடி செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் மனுவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் பிரிவினர், திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் எனும் இளைஞரைக் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், புகார் அளித்த கல்லூரி மாணவி உட்பட, 15க்கும் மேற்பட்ட பெண்களிடம் சுமார் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார். ஸ்மூல் செயலி மூலமாக டூயட் பாடி பெண்களுடன் நட்பாகப் பழகத்தொடங்கும் லோகேஷ், பின்னர் காதலிப்பதாகக் கூறி நெருக்கத்தை ஏற்படுத்தி, ஏதாவதொரு கட்டத்தில், அவசர உதவி தேவைப்படுவதாகக்கூறி பணம் பறித்து வந்துள்ளார். தற்போது கைதான லோகேஷிடம் இருந்து 72.2 கிராம் தங்க நகைகள், இரண்டு செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.