வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சென்னை வந்து வேலை செய்த இளைஞர், கத்திபாராவில் வழிகாட்டி பலகை விழுந்த விபத்தால் உயிரிழந்தார். இதனால் நிர்கதியான குடும்பம் மீளாத்துயரில் ஆழ்ந்திருக்கிறது.
கையில் வீறிட்டழும் பச்சிளம் குழந்தை, அருகில் நான்கு வயதேயான பெண் குழந்தை... ஆற்றுப்படுத்த முடியாத துக்கத்தில் பரிதவிக்கும் ராதிகா. பிழைக்கப்போன இடத்தில் கணவரின் உயிரே பறிபோயிருப்பதை ஏற்க முடியாத துயரத்தை கண்ணீரில் கரைத்துக் கொண்டிருக்கிறது இக்குடும்பம். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மகமாயிபுரத்தில் சண்முகசுந்தரத்தின் கூரை வீடே அவர்களின் வறுமைக்கான சான்று. தந்தை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சண்முகசுந்தரத்தின் வருமானம் மட்டுமே இக்குடும்பத்தின் வருவாய் ஆதாரம். சென்னை சைதாபேட்டையில் ஐஸ்கிரீம் கடையொன்றில் கடந்த 2 ஆண்டுகளாக வேலைபார்த்துவந்த சண்முகசுந்தரம், கத்திபாராவில் பேருந்து மோதி வழிகாட்டிப்பலகை விழுந்த விபத்தில் உயிரிழந்திருப்பது இக்குடும்பத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது.
உயிரிழந்த சண்முகசுந்தரத்தின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அத்துடன் போக்குவரத்து கழக நிதியில் இருந்து ஒருலட்சம் ரூபாயும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயுமாக மொத்தம் 3 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் இந்நிதியை நேரில் சென்று வழங்கினார்.