மதுவுக்கு அடிமையாகி பெற்ற பிள்ளைகளையே பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார்கள்..
”மதுபானம் சாப்பிடுவதால் உடலுக்கு மிகப்பெரிய தீங்கு ஏற்படுகிறது. மது குடித்துவிட்டு போய் பொண்டாட்டியை அடிப்பது. பெற்ற பிள்ளைகளை அடிப்பது. பெற்ற பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்வது என இந்த குடி, மனிதனை பாடாய் படுத்துகிறது. குடிப்பதால் ஏகப்பட்ட சிக்கல் ஏற்படுகிறது. அப்பா குடிக்கிறாருன்னு சொல்லி, லெட்டர் எழுதிட்டு செத்துப் போச்சு பாவம். புருசன் பொட்டாட்டிக்குள்ள சண்டை வெட்டுக் குத்துக் கொலை வரைக்கும் போகுது. ஆகவே மதுபானத்தை நிரந்தரமாக ஒழிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் ஒருவர்.
மது குடிப்பதால் கணவன் - மனைவி இடையேயான ஒற்றுமை சீர்குலைவதோடு, பிள்ளைகள் படிப்பதற்கு பணமில்லாமல் தவிக்கிறார்கள்..
”பல கல்லூரி மாணவர்களும், அன்றாட வேலைக்கு போறவங்களும், மது பழக்கத்துக்கு அடிமையாகி பொருளாதாரத்துல சீரழிந்து, குடும்பத்த நடத்த கஷ்டப்பட்டு, நெறைய பிரச்னைகள் உருவாகுது. அது மட்டுமில்லாம உடலோட ராஜ உறுப்புகள் பாதிக்கப்பட்டு, சிகிச்கைக்கு பணமில்லாம அகால மரணம் ஏற்படுது, மது பழக்கத்தால் கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை சீர்குலைந்து பிள்ளை படிப்பதற்கு பணமில்லாம தவிக்கிறாங்க” என்று வேதனை தெரிவிக்கிறார் ஒருவர்.
மது பழக்கத்திற்கு அடிமையாகி மது அருந்த பணமில்லாததால் வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள்..
”மது பழக்கத்தினால் அதிகப்படியான குற்றங்கள் நடப்பதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மது அருந்த பணமில்லாத காரணத்தினால், தன் சுயநலத்தை இழந்து வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள். அதேபோல் மனைவியுடன் சண்டையிட்டு அவர்களிடம் இருந்து பணத்தை பிடிங்கிவந்து மது குடிக்கும் அவலநிலை ஏற்படுகிறது. இந்த குடிப்பழக்கத்தினால் பொருளாதார ரீதியாகவும் சமூக சீர்கேடுகளும் அதிக அளவிலே நடந்து கொண்டு இருக்கிறது” என்று ஆதங்கப்படுகிறார் ஒருவர்.
தமிழகத்தில் மதுவால் ஏற்படக் கூடிய மரணத்திற்கு அரசு பதில் சொல்லிதான் ஆகணும்...
”உண்மையிலேயே இந்த சிறுமியின் மரணம், நமது சமுதாயத்திற்கு மிகப்பெரிய அவமானம். கண்டிப்பாக இதைப்பற்றி பரிசீலனை செய்யணும். மது நமது நாட்டுக்குத் தேவையா என்பது கண்டிப்பாக மிகப்பெரிக கேள்விதான். மது இந்த நாட்டிற்கு சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. தமிழகத்தில் மதுவால் ஏற்படக் கூடிய மரணத்திற்கு அரசு பதில் சொல்லிதான் ஆகணும். அதற்கான விளக்கத்தை கொடுத்துதான் ஆகணும்” என்று விமர்சிக்கிறார் ஒருவர்.
ஒரு சின்ன குழந்தை அது எவ்வளவு வருத்தத்துல இருந்திருக்கும்...
”மது குடிப்பதால் அவனோட ஆயுசும் கெட்டுப்போகுது. மற்றவர்களுக்கும் அதனால் பிரச்னை வருது, ஒருத்தன் ஆயிரம் ரூபாய் சம்பாதித்தால், 500, 600 ரூபாயை குடுச்சே தீக்குறான். இப்படி இருந்தா வீடு எப்படி முன்னேறும். இதனால நான் தினமும் பாதிக்கப்பட்டுகிட்டு இருக்கேன். அதனால் நான் சொல்றேன். ஒரு பிள்ளையோட மரணம் என்னை நெறையா பாதிச்சிருச்சு. அது ஒரு சின்ன கொழந்த அது எவ்வளவு வருத்தத்துல இருந்திருக்கும். கனவுகளோடு வாழ்ந்த குழந்தை, இப்ப என்னாச்சு” என்கிறார் ஒருவர்.
மது பழக்கத்தால் உடம்புக்கு தீங்கு ஏற்படுவதோடு, குடும்பத்திற்கும் தீங்கை விளைவிக்கும்..
"இந்த சமூக தீமைகளுக்கு உட்பட்டவர்கள் பட்டியலில், குடிப்பழக்கமும் ஒன்றாக இருக்கிறது. இந்த குடிப்பழக்கமானது, குடும்பத்தில் மிகப்பெரிய சிக்கல்களை மனைவி மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்துகிறது. இந்த குடிப்பழக்கத்தினால், தன்னுடைய உடம்புக்கு தீங்கு ஏற்படுவதோடு, குடும்பத்திற்கும் தீங்கை விளைவிக்கும். குடும்பத்தில் இருக்கக் கூடிய குழந்தைகளுக்கு மிகப்பெரிய அவலத்தையும் சிக்கலையும் உருவாக்குகிறது" என்று கூறுகிறார் ஒருவர்.
குடி, குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கொடுக்கும்னு தெரிந்தேதான் குடிக்கிறோம். குடியால் ஏற்படும் சமூக சீர்கேடுகளை சீர் செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்பதே உண்மை.