கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற, ஆதரவற்ற பெண்கள் பாதுகாப்பான முறையில் வாழ்வதை உறுதிசெய்ய அவர்களுக்கென தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டுப் பேசிய அமைச்சர், சிறுவர்களை போதைப் பழக்கத்திலிருந்து மீட்க சென்னை மற்றும் நெல்லை மாவட்டங்களில் 76 லட்சம் ரூபாய் செலவில் போதை தடுப்பு மையங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
பெண்களுக்கு சம வாய்ப்பு சம உரிமை பொருளாதார மேம்பாடு மற்றும் அரசியலில் வாய்ப்பு பெறவும் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்த தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை உருவாக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். கொரோனா காலத்திற்குப் பின்னர் பள்ளிக்குத் திரும்பும் மாணவர்களுக்கு உடலில் ஊட்டச்சத்து உள்ளதா என்பதை BMI மூலம் கண்டறிய 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் கூறினார்.