வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்மிகு நகர திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எ.பி. நந்தகுமார், கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சீர்மிகு நகர திட்ட பணிகள் தற்போது எந்த நிலையில் உள்ளது. அதனை விரைந்து முடிக்க வேண்டியது குறித்து ஆலோசனைகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வேலூரில் இந்நேரம் சீர்மிகு நகர திட்ட பணிகள் முடிவடைந்து இருக்க வேண்டும். ஆனால், தற்போது 70 விழுக்காடு பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. ஒப்பந்ததாரர்கள் சரியாக வேலை செய்யாததால் பணிகள் முடியாமல் உள்ளது.
ஒப்பந்த எடுத்த எல்&டி(L&T) நிறுவனம் அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி துணை ஒப்பந்தம்(Sub - contract) அளித்துள்ளனர். இதனால், வேலூர் மாநகராட்சியில் ஒரு தெரு கூட சேறு, சகதி இல்லாமல் இல்லை. முதலில் குழியைத் தோண்டுவது பின்னர் ரோடு போடுவது, பிறகு மீண்டும் தோண்டுவது என ஏனோ தானோ என்று பணிகள் நடந்துள்ளன. இன்று பணிகளை முடிப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம்.
மேலும் வருகிற 12-ம் தேதி மாநகராட்சி பகுதியில் வீதிவீதியாக சென்று ஆய்வு செய்ய உள்ளோம். முன்பை போன்று தெருக்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க முடியாது எனக் கேரள அரசு கூறியிருந்தது ஆனால், அதனையும் மீறி 142 அடி தண்ணீரை நிரப்பி காட்டியுள்ளோம்” என்றார்.