கனமழை பெய்ததால், கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை தடுப்பணையில் நுரைபொங்கியபடி தண்ணீர் வெளியேறி வரும் நிலையில், ஆலைக்கழிவுகள் அதில் கலக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மழைநீரை சேமிக்கவும், கடல் நீர் உட்புகாதவாறு தடுப்பதற்கும் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இப்பகுதியில் ஆகாயத்தாமரை படர்ந்து, தடுப்பணை முழுவதும் கழிவுநீர் தேங்கியிருந்துள்ளது. தற்போது பெய்த மழையின் காரணமாக, தடுப்பணையில் நுரைபொங்கியபடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
இதனிடையே நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் ஆலையிலிருந்து கழிவுநீர் கலப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால், உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, தடுப்பணையில் கலக்கும் நீர் ஆலைக்கழிவாக இருக்க வாய்ப்பில்லை என்றும், இருப்பினும் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.