சீர்காழி அருகே மீனவ கிராமத்தில், ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக வட்டாட்சியரிடம் புகார் அளித்தவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி மாவட்டம், கீழமூவர்கரை மீனவ கிராமத்தை சேர்ந்த நிலவன் என்பவர், அங்குள்ள அம்மன் கோயிலுக்கு வெண்கலத்தில் ஆன படிக்கட்டு அமைத்து தனது பெயரை பொறித்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, நிலவன் உட்பட ஆறு குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த குடும்பத்தினரிடம் பேசினால், 50ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், அத்தியாவசியப் பொருட்களை வழங்கக் கூடாது எனவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் திருவிழாவில் கலந்து கொள்ளக்கூடாது என ஒலிப்பெருக்கி மூலம் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த குடும்பத்தினர் வட்டாட்சியரிடம் புகார் அளித்தனர்.
பின்னர், வட்டாட்சியர் சண்முகம், டிஎஸ்பி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய போது, கிராம மக்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பதாக, கிராமத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகக் கூறப்படும் குடும்பத்தினர் மீது சிலர் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான பாதுகாப்பு உதவிகள் செய்யப்படும் எனவும் வட்டாட்சியர் சண்முகம் தெரிவித்துள்ளார்.