கே.கே.நகரில் இருந்து நெசப்பாக்கம் செல்லும் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய வாகனத்தை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தொடர் கனமழை காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தொடர் கனமழை பெய்துவருகிறது. சென்னை கே.கே.நகர் முக்கியச் சாலைகளில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இடையூறை எதிர்கொண்டு வருகின்றனர். அங்கு 3ஆவது நாளாக தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்திலும் தண்ணீர் புகுந்துள்ளது.
கே.கே.நகரில் இருந்து நெசப்பாக்கம் செல்லும் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய வாகனத்தை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதேபோல், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம். காலனி பகுதியில் நான்காவது நாளாக மழை நீர் வடியாமல் இருப்பதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட மக்கள் வெளியே செல்லமுடியாமல் அவதியடைந்து வருகின்றனர். தியாகராய நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலை, பசுல்லா சாலை உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை புரசவாக்கத்தை அடுத்துள்ள பட்டாளம் பகுதியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ள மக்கள், ஒவ்வொரு மழைக்காலத்தின்போதும் இந்த அவலநிலை தொடர்ந்து வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.