இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது 9 மாதம் முதல் 4 வயது வரையுள்ள குழந்தைகளும் ஹெல்மெட் அணிந்திருப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு குறித்த வரைவு விதிகளை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இதன்படி 4 வயதிற்கு உட்பட்ட குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அதிகபட்ச வேகத்தை 40 கிலோ மீட்டராக நிர்ணயிக்க அந்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. 9 மாதம் முதல் 4 வயது வரையுள்ள குழந்தைகளை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது அவர்கள் ஹெல்மெட் அணிந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என வரைவு விதியில் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான ஹெல்மெட் அல்லது சைக்கிள் ஓட்டும்போது அணியக்கூடிய ஹெல்மெட்டை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஓட்டுநருடன் இணைத்திருக்கும் வகையில் பெல்ட் அணிவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் வரைவு விதியில் கூறப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான இந்த பாதுகாப்பு விதிமுறைகள் விரைவில் சட்டமாக்கப்பட்டு அமல்படுத்தப்படும் என தெரிகிறது.