சென்னை நீலாங்கரையைச் சேர்ந்தவர்கள் நிக்ஸன் (46) கிருஷ்ணமாலா (40) தம்பதியர். இவர்களின் மூத்த மகள் பெமினா (15). இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கோடை விடுமுறையை கொண்டாட கடந்த 14 ஆம் தேதி குடும்பத்துடன் தேனி சுருளி அருவிக்கு காரில் இவர்கள் சென்றுள்ளனர். அருவியின் அருகே சென்ற போது கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு குளிக்காமல் ஓடையில் குளித்து விட்டு, ஊருக்கு கிளம்பியுள்ளனர்.
இதையடுத்து காரில் ஏறுவதற்காக வென்னியாறு பாலத்தின் அருகில் குடும்பத்துடன் நடந்து சென்றுள்ளனர். அப்போது வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தின் கிளை முறிந்து பெமினாவின் தலைப்பகுதியில் விழுந்துள்ளது. இதில், பலத்த காயமடைந்த அவருக்கு மூக்கிலும், வாயிலும் ரத்தம் வந்துள்ளது. சுற்றுலா சென்ற இடத்தில் யாரையும் தெரியாததால் தந்தை நிக்ஸன் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் உதவிக்கு வரவே, பெமினாவை கம்பம் அரசு மருத்துவமனைக்கு பெமினாவை அழைத்துச் சென்றுள்ளனர் குடும்பத்தினர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பெமினா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து உயிரிழந்த தனது மகளின் உடலை சொந்த ஊரான சென்னைக்கு எடுத்துச் செல்ல மருத்துவமனையை அணுகிய போது, அலைக்கழிக்கப்பட்டுள்ளார் நிக்சன்.
இதுதொடர்பாக நம்மிடையே பேசிய அவர், ”குளிர்சாதன பெட்டி கூட இல்லாமல் ரத்தம் உறைய உறைய மறுநாள் காலை வரை சவக்கிடங்கிலேயே எம்மகள் இருந்தார்” என கூறி உடைந்துவிட்டார்.
அலைக்கழிக்கப்பட்ட அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம், ‘தனியார் ஆம்புலன்ஸ் மூலம்கூட மகளின் உடலை சென்னைக்கு எடுத்துச் செல்கிறோம்’ என குடும்பத்தினர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அமரர் ஊர்தியிலேயே அனுப்பி வைப்பதாகக் கூறி, குளிர்சாதன பெட்டி இல்லாமல் தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கும் குளிர்சாதன பெட்டி இல்லாததால் மகளின் சடலத்தை திருச்சிக்கு அதே அமரர் ஊர்தியில் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுபற்றி நிக்சன் நம்மிடம் பேசுகையில், “என் மகளின் உடலுடன் இரண்டு மணிநேரம் சாலையில் காத்திருந்தேன். இடையே 4 வாகனங்களில் என் மகள் மாற்றப்பட்ட நிலையில். மாறி மாறி போராடி, 13 மணி நேரம் கழித்து சென்னைக்கு வந்து சேர்ந்தோம். அதற்குள் என் மகளின் உடல் சிதைந்துபோய்விட்டது. இதுவரையில் யாரும் இது குறித்து கேட்கவில்லை. சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு உதவி செய்கிறது... என் மகள் விபத்தில் எதிர்பாரா விதமாக இறந்தார்; அப்போது அவர் சடலத்தை தேனியில் இருந்து சென்னைக்கு கொண்டு வரக்கூட உதவ ஆளில்லை. அழுகிய நிலையில் எடுத்து வந்தோம்” என வேதனை தெரிவித்தார்.
பெமினாவின் தாய் கிருஷ்ணமாலா நம்மிடம் பேசுகையில், “பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய என் மகள், 19 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வருவதற்கு முந்தைய நாள் உயிரிழந்து விட்டாள். அவள் 10 ஆம் வகுப்பு தேர்வில் 389 மதிப்பெண்கள் பெற்றிருந்தாள். தான் தேர்ச்சி பெற்று விட்டது கூட தெரியாமல் உயிரிழந்து விட்டாள். அவளுக்கு மருத்துவம் படிப்பதே கனவு. 11 ஆம் வகுப்பில் சேர 3 பள்ளிகளில் விண்ணப்ப படிவங்கள் வாங்கி வைத்திருக்கிறோம். ஆனால் அதையெல்லாம் பார்க்க அவள் உயிருடன் இல்லை” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
‘இதுவரை யாரும் உதவிடவோ, வந்து பார்க்கவோ இல்லை’ என கவலை தெரிவிக்கும் இலங்கை தமிழரான நிக்ஸன், சென்னை நீலாங்கரையில் வசித்து வந்தாலும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமில் உள்ள தனது சொந்த வீட்டில் இருப்பதையே விரும்பி குடும்பத்துடன் அங்கு தங்கியுள்ளார். விடுமுறைக்கு கும்மிடிப்பூண்டி முகாமுக்கு வந்து செல்லும் மகள் இப்போது தம்முடன் இல்லை என வேதனையுடன் சொல்லும் நிக்சனுக்கு ஆறுதல் சொல்லக்கூட வார்த்தையற்றவர்களாகவே இருக்கிறோம்.
நிக்சனின் குடும்பத்திற்கு, தங்கள் மகளின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வரக்கூட யாரும் உதவிடவில்லை என்பதே ஆறாத வடுவாக உள்ளது.