ஊரடங்கின் புதிய தளர்வுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தததை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஒரு புறமும் மக்கள் அலைமோதிக் கொண்டிருக்க, டாஸ்மாக் கடைகளிலும் அதே நிலையைக் காண முடிந்தது.
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்றே குறைந்துள்ளதை அடுத்து மாநிலத்தில் தொற்று பாதிப்புள்ள 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டன. காலை முதலே டாஸ்மாக் கடைகளை தேனீக்கள் போல் மொய்த்த மது குடிப்போர் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச் சென்றனர். தருமபுரி மாவட்டம் அரூரில் காலை 7 மணிக்கே டாஸ்மாக் கடைகளில் முகாமிட்ட மது குடிப்போர் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்திலும் காலை முதலே மதுக்கடைகளில் கூட்டம் அலை மோதியது. முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தால் மட்டுமே மது வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு நெரிசல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மதுரை:
மதுரையில் 35 நாட்களுக்குப் பிறகு மாவட்டத்தில் உள்ள 248 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மது வாங்க காலையிலேயே அணி வகுத்த மது குடிப்போர் கடை திறக்கப்பட்டதும் உற்சாகத்தில் பூக்களை தூவி ஆரவாரம் செய்தனர். சிலர் மதுபாட்டில்களை வாங்கி அதற்கு சூடம் ஏற்றி வழிபாடும் செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி ராமசாமியாபுரம் பகுதியில் மதுக்கடை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடையைத் திறக்காமல் பணியாளர்கள் திரும்பிச் சென்றனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்த மது விரும்பிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கலிலும் மதுபாட்டில்களை வாங்க காலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப்படுவதால் கடை ஊழியர்கள் சுத்தம் செய்து விற்பனையை தொடங்குவதற்கு ஆயத்தமான போது, மது விரும்பிகள் சிலர் கடைக்கு மாலை அணிவித்து, சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்தனர்.
குழந்தையுடன் பைக்கில் வந்து போலீசில் சிக்கிய நபர்:
தேனி, செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரிய அளவில் கூட்டம் காணப்படவில்லை. புதுக்கோட்டை மாவட்டம் கைகாட்டியில் உள்ள அரசு மதுபானக் கடையில் மதுபானம் வாங்குவதற்காக, கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த நபரைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காவலர் ஒருவர் அந்த நபருக்கு அறிவுரை கூறி அனுப்பினார். அதற்கு அந்த நபர் காவலரை தரக்குறைவாக பேசிவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் வேகமாக புறப்பட்டபோது, சம்பந்தப்பட்ட காவலர் ஓடிவந்து வாகனத்தை பின்புறம் இழுத்தார். இதில் கைக்குழந்தையுடன் வந்த நபர், சற்று தடுமாறி நின்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் இருந்தபடியே காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், காவல் ஆய்வாளரும் மற்றொரு காவலரும் சென்று, அந்த நபரை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.