மத்திய அரசின் மித்ரா திட்டத்திற்கு தமிழ்நாட்டு ஜவுளித்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த வாய்ப்பை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்திய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் அதிக வேலைவாய்ப்பை வழங்கும் துறையாக திகழ்வது, ஜவுளித்துறை. தமிழ்நாட்டில் மட்டும் 1,200 நூற்பாலைகள், ஆடை உற்பத்தி ஆலைகள் 500 உட்பட ஒட்டுமொத்தமாக சுமார் 3 ஆயிரம் ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 70 முதல் 80 விழுக்காடு வரை கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மேற்கு மாவட்டங்களில் உள்ளன.
இம்மாவட்டங்களிலிருந்து மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனை மேம்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ள மித்ரா திட்டம் சீனாவுடன் போட்டிபோட உதவும் என்பது உற்பத்தியாளர்களின் நம்பிக்கையாகும்.4 ,445 கோடி ரூபாய் முதலீட்டில் 7 மெகா ஜவுளிப்பூங்காக்கள் தொடங்கப்படும் என்று மத்திய அரசின் அறிவிப்பு அதிக வளர்ச்சியை எட்ட உதவும் என்றும் மேற்கு மண்டல ஜவுளித்துறையினர் கூறுகின்றனர்.
மித்ரா திட்டத்திற்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தயார் நிலையில் உள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கும் மாநிலத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நூல் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.