வைகுண்ட ஏகாதசியையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
பெருமாள் கோயில்களில் வருடத்தில் ஒரு முறை திறக்கப்படும் பரமபத வாயிலைத் தாண்டி, பெருமாளை சேவிக்கிறபோது அன்றுவரை நாம் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்றும் வருங்காலத்துக்குத் தேவையான ஆற்றலும் வளமும் கிடைப்பதோடு வைகுண்டமும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதன்படி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இன்று பரமபதவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 4.15 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேநேரத்தில் கொரோனா பரவல் காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. காலை 6 மணி முதல் அவர்கள் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது
இதேபோல, சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் வெங்கடேச பெருமாள் கோயிலிலும் பரமபத வாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 6 மணி முதல் இங்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.