மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 26 கிராம மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்த்தில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பு மீனவர்களிடையே பதற்றம் நிலவுவதால் நான்கு மாவட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையாறு முதல் தரங்கம்பாடி வரையிலான 26 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளது. நேற்று ஒரு தரப்பு மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையுடன் மீன்பிடிக்க முயன்றனர். அதனை எதிர்த்து மற்றொரு தரப்பினர் கடலில் படகுகளுடன் குவிந்தனர். இதனையடுத்து மீன்வளத்துறை மற்றும் காவல் துறை பேச்சுவார்தையின் பேரில் சுருக்குமடி வலை மீனவர்கள் கரை திரும்பினர்.
அப்போது வாணகிரியை சேர்ந்த சங்கர் என்பவரின் பைபர் படகை திருமுல்லைவாசலை சேர்ந்த விசை படகு இடித்து உடைந்து இருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பூம்புகாரை சேர்ந்த 4 பைபர் படகுகளுக்கு தீவைக்கபட்டது. பின்னர், இரு பிரிவு மீனவர்கள் தனித்தனியே நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினர். அதன்படி உரிய தீர்வு கிடைக்கும் வரை இருதரப்பு மீனவர்களும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.
இதனால் 750 விசை படகுகள் 5000 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நிறுத்தபட்டுள்ளது. தொடர்ந்து பதற்றம் நீலவுவதால் காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தலைமையில் நான்கு மாவட்ட போலிசார் கடலோர கிராமங்களில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.