தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஷாப்பிங்கிற்காக கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
வழக்கமான ஆடைகள்தான் என்றில்லாமல் செல்போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தவணை முறையிலான பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில் இதை தங்களுக்கு சாதகமான வணிக வாய்ப்பாக வங்கிகள் மாற்றி வருகின்றன. முன்னணி வங்கிகள் தங்கள்மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி மற்றும் தவணையில் சலுகைகளை அளித்து வருகின்றன. நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, கூடுதல் செலவுகளற்ற 6 மாத தவணை மூலம் பொருட்கள் வாங்கலாம் என அறிவித்துள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கியும் தனது ஏடிஎம் அட்டை மூலமாக பொருட்களை வாங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிப்பதாக தெரிவித்துள்ளது.
ஐசிஐசிஐ டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி பிக்பேஸ்கட் தளம்மூலம் பொருள் வாங்குபவர்களுக்கு 15 சதவிகிதம் பணம் திரும்பத் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள்தான் என்றில்லாமல் பல்வேறு பிரபல வீட்டு உபயோக நிறுவனங்களும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களுக்கு போட்டிதரும் வகையில் தள்ளுபடிகள், சலுகைகளை அறிவித்துள்ளன. பைக், ஸ்கூட்டர், கார் விற்பனையும் பண்டிகைக் காலத்தில் களைகட்டியுள்ளது. தனியார் நிறுவனங்கள் போல காதி உள்ளிட்ட அரசுத்துறை நிறுவனங்களும் தள்ளுபடிகள், பரிசுப் பொருட்கள் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.