நெடுந்தூரம் பயணிக்கும் பயணிகளின் வசதிக்கானது என்று கூறப்படும் மோட்டல்கள், அதிக விலை, சுகாதாரமற்ற தன்மை ஆகியவை மூலம் தங்களைப் பதம் பார்ப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
நெடுந்தொலைவு பயணிக்கும் பேருந்துகளில் வருவோர் பசியாற, தேசிய நெடுஞ்சாலைகளில் மோட்டல்கள் இயங்கி வருகின்றன. இங்கு பேருந்துகள் நிறுத்தப்படும்போது பயணிகள் இறங்கி இயற்கை உபாதைகளைக் கழிப்பதோ, பசியாறுவதோ நடக்கிறது. ஆனால் இந்த உணவகங்களில் தரமான உணவு கிடைக்கிறதா? நியாயமான விலையில் உணவு கிடைக்கிறதா? கழிவறைகள் சுகாதாரமாக உள்ளதா என்றால் அது கேள்விக்குறியே. நெடுஞ்சாலையோர உணவகங்களில், தோசை 60 ரூபாய், தேநீர் 20 ரூபாய், திண்பண்டங்கள் 15 ரூபாய் என கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக கூறுகிறார்கள் பயணிகள். மேலும், பேருந்துகள் ஒரு குறிப்பிட்ட மோட்டலில் நிறுத்தப்படுவதாகவும், பேருந்து பணியாளர்களுக்கும் மோட்டலுக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.
பேருந்து நிறுத்தப்படும் மோட்டல்களில் வசூலிக்கப்படும் கட்டணங்கள், சில நேரங்களில் பயணக்கட்டணத்தை விடவும் அதிகம் என்கிறார்கள் பயணிகள். இயற்கை உபாதை கழிக்க, இந்த மோட்டல்களை பயன்படுத்தும் பெண்களும் சில சங்கடங்களை எதிர்கொள்கிறார்கள். உணவுகளின் விலைப்பட்டியலை மக்கள் பார்வைக்கு தெரியுமாறு வைக்கவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிற நிலையிலும் மறைவாகவே விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. இதே நிலைதான் பல்வேறு மோட்டல்களிலும் காணப்படுகிறது.