தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், குறைந்த அளவே கோவாக்சின் உள்ளதால் டோக்கன் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த ஜூலை 13 ஆம் தேதி ஒரு லட்சம் டோஸ், 15 ஆம் தேதி 91 ஆயிரத்து 580 டோஸ் என வெறும் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 580 டோஸ் மட்டுமே கோவாக்சின் தடுப்பூசி தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 20 லட்சம் டோஸ்வரை தமிழகத்துக்கு கிடைத்துள்ளன. அதாவது கோவிஷீல்டு கிடைப்பதில் 10 ல் 1 மடங்கு மட்டுமே கோவாக்சின் மருந்துகள் தமிழகத்திற்கு தரப்படுகின்றன. இதில் ஏற்கனவே தமிழகத்தில் கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து 2 ஆம் தவணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறுகிறது தமிழக மருத்துவத்துறை. கோவிஷீல்டைப் போல் 84 நாட்கள் அல்லாமல் கோவாக்சினுக்கான 2 ஆம் தவணை 28 நாட்களிலேயே போடலாம் என்பதால் தினசரி ஏராளமானோர் கோவாக்சின் 2 ஆம் தவணைக்காக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றை நாடி வந்த வண்ணம் உள்ளனர்.
மருத்துவத்துறை வழங்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் இதுவரை 26 லட்சத்து 28 ஆயிரத்து174 டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன. இவர்களில் சுமார் 10 சதவிகிதம் பேர் மட்டுமே 2 ஆம் தவணை தடுப்பூசியை நிறைவு செய்துள்ளதாக கணிக்கப்படுகிறது. ஜூன் 18 முதல் ஜூலை 16 வரையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் அடிப்படையில் சுமார் 20 லட்சம் பேர், 2 ஆம் தவணைக்கு காத்திருக்கிறார்கள். தற்போது தமிழகத்தின் கையிருப்பில் உள்ள சுமார் 2 லட்சம் டோஸ் கோவாக்சின் மருந்துகளை அனைத்து மாவட்டங்களுக்கும் பங்கிட்டு அனுப்பி, முறையாகப் பயன்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறுகிறது தமிழக மருத்துவத்துறை.
இம்மருந்துகள் அதிகபட்சம் 3 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்குமென கணிக்கப்படுவதால், இரண்டாம் தவணை மருந்தை எதிர்நோக்கி காத்திருக்கும் சுமார் 20 லட்சம் பேருக்கும் தேவையான கோவாக்சின் மருந்தை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர் பொதுமக்கள்.