மு.கருணாநிதியின் படத் திறப்பு விழா.. சென்னை வரும் குடியரசுத் தலைவரின் பயணத்திட்டம்

மு.கருணாநிதியின் படத் திறப்பு விழா.. சென்னை வரும் குடியரசுத் தலைவரின் பயணத்திட்டம்
மு.கருணாநிதியின் படத் திறப்பு விழா.. சென்னை வரும் குடியரசுத் தலைவரின் பயணத்திட்டம்
Published on

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நாளை மாலை முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் திருவுருவப்பட திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், குடியரசுத் தலைவரின் பயணத்திட்டம் மற்றும் யாரெல்லாம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர் என்று பார்க்கலாம்.

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 12.45 மணிக்கு சென்னை வருகிறார். அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் வரவேற்க உள்ளனர். அங்கிருந்து கிண்டி ராஜ்பவன் செல்லும் குடியரசு தலைவர் அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.

மாலை நாலரை மணி அளவில் ராஜ்பவனில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை செல்லும் குடியரசுத் தலைவர் சென்னை மாகாண சட்டசபை உருவாகியதன் நூறாம் ஆண்டு விழாவில் மாலை 5 மணிக்கு கலந்து கொள்கிறார். நிகழ்ச்சியில் சபாநாயகர் வரவேற்புரை ஆற்றுகிறார். நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றவுள்ளார். படத் திறப்பு விழாவை ஒட்டி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை விழாக்கோலம் பூண்டுள்ளது.

கொரோனா பரவலுக்கு இடையே நிகழ்ச்சி நடைபெறுவதால் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 234 எம்எல்ஏக்கள், முன்னாள் சபாநாயகர்கள், சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், தமிழக மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட ஒரு சில உயர் அதிகாரிகள் மட்டுமே நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் சட்டமன்ற செயலாளர்கள், பத்திரிகையாளர்கள் 30 பேர் என 320 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

சட்டமன்றத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் அமரும் முதல் வரிசை, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியினர் அமரும் முதல் வரிசையில் உள்ள நாற்காலிகள் எடுக்கப்பட்டு அதற்கு பதிலாக 2 மீட்டர் இடைவெளியில் அமரும்படி இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வரும் நிலையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை வண்ணவிலக்குகளால் ஜொலிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com