'கனவு நனவாகிவிட்டது' - கே.பி.பார்க் குடியிருப்பில் குடியேறிய மக்கள் நெகிழ்ச்சி

'கனவு நனவாகிவிட்டது' - கே.பி.பார்க் குடியிருப்பில் குடியேறிய மக்கள் நெகிழ்ச்சி
'கனவு நனவாகிவிட்டது' - கே.பி.பார்க் குடியிருப்பில் குடியேறிய மக்கள் நெகிழ்ச்சி
Published on

சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்பில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் மக்கள் குடியேறுமாறு அறிவிப்பு வெளியான நிலையில், 80 விழுக்காட்டினர் அங்கு குடியேறியுள்ளனர். தங்களது கனவு நனவாகிவிட்டதாக குடியிருப்புவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்களுக்கான வீடு ஒதுக்கப்பட்டும் அதில் குடியேற முடியாதவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கான பதிலை சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்பு மக்களிடம் கேட்டால் தெரியும். விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்காக கட்டப்பட்டதுதான் இந்த குடியிருப்பு. ஆனால் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே இதில் குடியேற முடியும் எனக் கூறப்பட்டதாக தெரிகிறது. இப்படி ஒரு நிபந்தனையால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது.

இதனால் இரண்டு ஆண்டுகளாக தகர ஷீட்டால் உருவாக்கப்பட்ட கொட்டகையில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வெளியான அறிவிப்பில், கேபி பார்க் குடியிருப்பில் முதற்கட்டமாக ஒதுக்கப்பட்ட 864 குடியிருப்புகளுக்கு உரியவர்கள் விரைந்து குடியேறுமாறு தெரிவிக்கப்பட்டது.

அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்த மக்கள், ஆசை ஆசையாய் அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினர்.வீடு ஒதுக்கப்பட்டவர்களிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுமா என்பது குறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இயக்குநர் கோவிந்தராவிடம் கேட்டபோது, அது பற்றி அரசு ஆலோசித்து வருவதாக கூறினார்.

புளியந்தோப்பு கே பி பார்க் குடியிருப்புகளில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலுத்திய பின்பே மக்கள் முறைப்படி குடியேற முடியும் என கூறப்பட்டு வந்த நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பில் முதல் கட்டத்தில் கட்டப்பட்ட 864 குடியிருப்புகளின் குடியிருப்புதாரர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு விரைந்து குடியேறுமாறு கூறப்பட்டுள்ளது.

பயனாளிகள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக பார்த்துக்கொள்ள வேண்டும், கட்டடத்தின் பார்க்கிங் பகுதியில் கால்நடைகளை கட்டக்கூடாது, வெளிநபர்களின் வாகனங்களை நிறுத்தக்கூடாது போன்ற அறிவுறுத்தல்களையும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கொடுத்துள்ளது.

ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுக்காமல் வீடுகளுக்குள் குடியேற மக்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குறியது. எனினும் அது போதாது, விரைவில் அந்த தொகையை முழுவதுமாக ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com