மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், அருகே உள்ள குடியிருப்புகள் வெள்ளநீரில் தத்தளிக்கின்றன.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், உபரிநீர் அப்படியே காவிரியாற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால், மேட்டூர் அருகே எம்.ஜி.ஆர். நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் முழங்கால் அளவிற்கு வெள்ளநீர் புகுந்துள்ளது.
வெள்ளநீருடன் சாக்கடை நீரும் கலந்துள்ளதால் சுகாதார சீர்கேடு நிலவுவதாக கூறும் மக்கள் விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் வருவதால் அச்சமாக இருப்பதாக வருந்துகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டு மழையின்போதும் தண்ணீர் புகுவது தொடர்கதையாக இருப்பதால் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.