இந்திய ராணுவத்தின் ராணுவ உடைகளை இனி தனியார் நிறுவனம் தயாரிக்கும் என்ற மத்திய அரசின் முடிவு வருங்காலங்களில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஜனவரி 15 ம் தேதி கொண்டாடப்பட்ட இந்திய ராணுவ தினத்தில் ராணுவ வீரர்களுக்கான புதிய ராணுவ உடை அறிமுகப்படுத்தப்பட்டது. இனி நாடு முழுவதும் 13 லட்சம் ராணுவ வீரர்கள் இந்த புதிய உடையை பயன்படுத்துவார்கள் என ராணுவத்துறை வட்டாரம் கூறுகிறது.
சென்னையில் இருக்கும் ஆவடி தொழிற்சாலை உட்பட நாட்டில் இருக்கும் 4 தொழிற்சாலை மட்டுமே இதுவரை ராணுவ உடைகள் தயாரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டில் மத்திய அரசு எடுத்த முடிவின் அடிப்படையில் தனியார் நிறுவனங்களும் ராணுவ உடை தயாரிக்கும் என்ற முடிவு உடனடியாக அமல்படுதப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். இது வெறும் ஆடைக்கான விஷயம் மட்டுமல்லாமல்; ஆவடி தொழிற்சாலையில் இருக்கும் 2,000 ஊழியர்கள் உட்பட, நாடு முழுவதும் இருக்கும் 72 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் இந்த நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் தொழிற்சங்கத்தினர்.
தேசிய ஆயத்த ஆடை தொழில்நுட்ப நிறுவனம் மூலமாக வடிவமைப்பு செய்யப்பட்ட புதிய ராணுவ உடை டிஜிட்டல் அச்சு வடிவமைப்பு கொண்டதாகவும், அமெரிக்க ராணுவ வீரர்கள் பயன்படுத்துவது போன்றது என கூறுகின்றனர். தற்போது ஒர் ஆண்டுக்கு ராணுவ உடைகள் தயாரிக்க 260 கோடி செலவாகும் நிலையில் எதிர் காலத்தில் இதற்கு கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்ற கருத்தையும் தொழிற்சங்கத்தினர் முன்வைக்கிறார்கள்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய விவகாரத்தில் தனியார் நுழைய அனுமதிக்கக்கூடாது என்றும், இந்த நடவடிக்கையை முழுமையாக கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.