ஓஎம்ஆர் சாலை சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டண வசூல் இல்லை: வாகன ஓட்டிகள் வரவேற்பு

ஓஎம்ஆர் சாலை சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டண வசூல் இல்லை: வாகன ஓட்டிகள் வரவேற்பு
ஓஎம்ஆர் சாலை சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டண வசூல் இல்லை: வாகன ஓட்டிகள் வரவேற்பு
Published on

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் நாளை முதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் 1999ஆம் ஆண்டுக்கு பிறகு பன்னாட்டு நிறுவனங்கள் பெருகின. சென்னையின் ஐ.டி. ஹப்பாக மாறிய ஓ.எம்.ஆர். சாலை, 2008ஆம் ஆண்டு "IT Express way" வாக மாறியது. மத்திய கைலாஷில் இருந்து சோழிங்கநல்லூர் வழியாக சிறுசேரி கிராமம் வரை 20 புள்ளி 1 கிலோமீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலையுடன் கூடிய 4 வழிப் பாதை அமைக்கப்பட்டது.

மேடு, பள்ளங்கள் இன்றி பளபளக்கும் சாலை, இரவை பகலாக்கும்படியான விளக்குகள், முறையான போக்குவரத்து குறியீடுகளுடன் அமைக்கப்பட்ட ஓ.எம்.ஆர். சாலையில், பெருங்குடி, நாவலூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், அக்கறை ஆகிய பகுதிகளில் 5 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சம் வாகனங்கள் பயணிக்கும் சாலையில் 13 ஆண்டுகளாக கட்டண வசூலில் ஈடுபடும் சுங்கச் சாவடிகளை மூடக் கோரி போராட்டமும் நடந்தது.

தற்போது ஓம்.எம்.ஆர். சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெற உள்ளதால், பெருங்குடி, துரைப்பாக்கம், மேடவாக்கம், அக்கறை பகுதிகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் இனி கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடி குறித்து எந்தவித அறிவிப்பும் இடம்பெறாதது வாகன ஓட்டிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஐ.டி எக்ஸ்பிரஸ் வே லிமிட்டில் கேட்டபோது, துறை ரீதியான அறிவிப்பு வரவில்லை எனத் தெரிவித்துள்ளனர். நாவலூர் சுங்கச்சாவடி சென்னை மாநகராட்சி எல்லைக்கு அருகில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பதால் அங்கு சுங்க கட்டணம் வசூல் குறித்து தெளிவான விளக்கத்தை எதிர்பார்த்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com