மதுரை ஆதீனத்தின் 293ஆவது பீடாதிபதியாக பொறுப்பேற்றுவிட்டதாக நித்யானந்தா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதியாக 1980ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த அருணகிரி நாதர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 13ஆம் தேதி காலமானார். அதனை தொடர்ந்து, திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி ,மதுரை ஆதீன மடத்தின் 293-வது பீடாதிபதியாக பொறுப்பேற்று மடத்தின் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக தான் பொறுப்பேற்றுக் கொண்டதாக நித்யானந்தா அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையும், புகைப்படங்களும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. மறைந்த பீடாதிபதி அருணகிரிநாதருக்கு தேவையான சாஸ்திர, சம்பிரதாயங்களை தான் கைலாசாவில் இருந்து செய்து முடித்து விட்டதாகவும், ஆன்மீகம் மற்றும் மடத்தின் தர்ம ஆச்சாரங்களின்படி மடத்தின் அதிகாரப்பூர்வ 293-வது பீடாதிபதியாக பொறுப்பேற்று கொண்டதாகவும் நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார்.