அதிக பலா பழங்களை உண்ட மயக்கத்தில் ஒரே இடத்தில் பல மணி நேரமாக நின்று ஓய்வெடுத்த காட்டு யானை. உடல்நிலை பாதிக்கபட்டதாக நினைத்து வனத்துறைக்கு தகவல் கொடுத்த மக்கள்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நாடுகாணி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒட்டிய வனப்பகுதியில் பல மணி நேரமாக காட்டு யானை ஒன்று ஒரே இடத்தில் இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். அந்த யானை காலை சிறிது நேரம் அதே பகுதியில் படுத்தும் இருந்திருக்கிறது. யானை உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அப்பகுதியில் நிற்பதாக எண்ணி ஊர்மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், காட்டு யானை அருகே சென்று பார்த்திருக்கிறார்கள். அப்போது யானை நல்ல உடல்நிலையில் இருந்ததோடு அங்கிருந்து மெல்ல நகர துவங்கி இருக்கிறது. நேற்று இரவு நாடுகாணி பகுதிக்குள் புகுந்த அந்த யானை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பலா பழங்களை உள்ளிட்ட உணவுகளை தேவையான அளவிற்கு சாப்பிட்டு இருக்கிறது. இதனால் உண்ட மயக்கத்தில் அந்த யானை ஒரே இடத்தில் பல மணி நேரமாக நின்று ஓய்வெடுத்து இருக்கிறது. வனத்துறை அருகே சென்றதும் யானை அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்று இருக்கிறது. பல மணி நேரமாக சாலையில் நின்றபடி யானையைப் பார்த்த மக்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.