முதுகுளத்தூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி காசாளரின் கந்துவட்டி கொடுமையால், விவசாயி ஒருவர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இறந்த விவசாயியின் வாக்குமூல வீடியோ வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த முதியவர் விவசாயி தங்கவேல், அதே பகுதியைச் சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் காசாளர் கருப்பையா என்பவரிடம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மூன்று லட்ச ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில், கொடுத்த பணத்துக்கு வட்டியும் அசலையும் சேர்த்து உடனே கட்டுமாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி காசாளர் கருப்பையா அவதூறாக பேசி தொந்தரவு செய்ததாக கூறப்படும் நிலையில், விவசாயி தங்கவேல் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிரிழந்தார்.
இறப்புக்கு முன்னதாக தனது வாட்ஸ்அப் செல்லில் இறப்புக்கு காரணம் குறித்து வீடியோ பதிவு செய்த தங்கவேல், தான் வாங்கிய பணத்திற்கு தற்போது வரை அசல் பணம் 3 லட்சத்திற்கு மேலாக 3.50 லட்சம் வட்டியாக செலுத்தியுள்ளதாகவும், ஆனால் அவர் தன்னிடம் மூன்று லட்சத்திற்கு பதிலாக 6 லட்ச ரூபாய் பெற்றதாக தன்னிடம் ஏமாற்றி மறைத்து வைத்து கையொப்பத்தை பெற்றுள்ளாதாக பதிவு செய்துள்ள தங்கவேல், தமிழக முதல்வரிடம் போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இந்த தகவலை தெரிவிக்குமாறு பதிவு செய்துள்ளார்.
பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்த தங்கவேலுவை மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் உடல்கூறு ஆய்விற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது
போலீசார் விசாரணையில் இறந்த தங்கவேல், கருப்பையா விடம் குறைந்த வட்டிக்கு பணத்தை பெற்று அதே பணத்தை பரமக்குடியில் சிலரிடம் அவரும் கூடுதல் வட்டிக்கு கொடுத்து சம்பாதித்து வந்ததாகவும், ஆனால் தங்கவேல் பணம் கொடுத்த நபர்கள் பணத்தை திருப்பி கொடுக்க முடியாத நபர்கள் சிலர் வெளியூர்களுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், இந்த சூழலில் கருப்பையாவிற்கு அவசரத் தேவை என்பதால் பணத்தை உடனடியாக கேட்டதால் கொடுக்க முடியாத தங்கவேல் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக இளஞ்செம்பூர் போலீசார், தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி காசாளர் கருப்பையாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை தீர்வல்ல:
மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)