வாழ்வில் ஒவ்வொரு நாளுமே நமக்கு புத்தம் புதிய பொழுதுதான். நேற்றைய கசப்பும், நாளைய ஏக்கமும் மனதில் நிரம்பியே எல்லா காலையும் நம் ஒவ்வொருவருக்கும் விடிகிறது. இப்படி நமக்கு கிடைக்கும் இந்த வாழ்வில், எப்போதுமே மற்றவர்களுக்காக நாம் நம்முடைய இயல்பை மாற்றிக்கொள்ளக்கூடாது. இதை உணர்த்தும் ஒரு குட்டி ஸ்டோரி இங்கே உங்களுக்காக!
குளமொன்றில் விழுந்த தேள் ஒன்றை, அவ்வழியாக சென்ற துறவி ஒருவர் மீட்டு எடுத்து வெளியே போட முயன்றிருக்கிறார். அப்போது அவரை அந்த தேள் கொட்டுவதற்கு முயற்சித்திருக்கிறது. இதனால் சமயோகிதமாக செயல்பட்ட அவர், தனக்கும் எந்த வித பிரச்னையும் ஏற்படாமல் நேர்த்தியாக அவர் தேளை பத்திரமாக மீட்டு நீரிலிருந்து வெளியே எடுத்து தரையில் போட்டுள்ளார்.
அவ்வழியாக அவரின் இந்தச் செயலை கண்ட ஒருவர், `தேள்தான் உங்களை தாக்குகிறதே... பின் ஏன் அதற்கு உதவுகின்றீர்கள்? இவ்வளவு ரிஸ்க் எடுத்து உதவத்தான் வேண்டுமா?’ என்றிருக்கிறார். அதற்கு அவர், `தாக்குவது தேளின் இயல்பு. அதேபோல அதை காப்பாற்றுவது என்னுடைய இயல்பு. அது அதனுடைய இயல்பை எனக்காக மாற்றிக்கொள்ளவில்லை. நான் மட்டும் ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்? மட்டுமன்றி நம்முடைய அன்பென்பது கடல் போல இருக்க வேண்டும். நம் மீது பிறர் செலுத்தும் வெறுப்பானது, கடலில் போட்ட விஷம் போலவே இருக்க வேண்டும்’ என்றுள்ளார்.
ஆம், நம் அன்பு கடல் போலவே, நம் மீது பிறர் செலுத்தும் வெறுப்பு கடலில் போடப்பட்ட விஷம்போலவே இருக்கவேண்டும். பிறருக்காக நாம் ஏன் நம்முடைய நற்பண்புகளை கெடுத்துக்கொள்ள வேண்டும்!?