தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் தமிழறிஞர் மறைமலையடிகள் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் இப்போதும் எப்போதும் வணங்குதற்குரியன. தமிழுக்கும், தமிழ்ச்சுவைக்கும், தமிழின் இனிமைக்குமாக பாடுபட்டுக்கொண்டிருந்தவரின் மகன் முதுமையில், வருவாய் இன்றி, வாடகை நிலுவைத்தொகை கட்டமுடியாத வறுமையில் உழன்று வருகிறார்.
தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல புலமை கொண்டவர். பிற மொழிகள் மீதான வெறுப்பால் அல்லாமல், தமிழின் இனிமையாலும், தமிழின் தொன்மையாலும், அழகாலும் கவரப்பட்டு தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கியவர் மறைமலை அடிகள்.
வேதாசலம் என்று பெற்றோர் வைத்த பெயரை தன் தமிழ்ப் பற்றால் மறைமலை அடிகள் என மாற்றிக்கொண்டவர். இவர் எழுதிய நூல்களில் 48 நூல்களை தமிழ்நாடு அரசு, அரசுடமையாக்கியிருக்கிறது. பிறமொழிக் கலப்பின்றி தமிழ் பேச வேண்டும் என்பதை தனது காலம் முழுவதும் வலியுறுத்தி வந்தவரின் மகன், மறை.பச்சையப்பன், ராயப்பேட்டை குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார். 74 வயதாகும் இவர், வருவாய் இல்லாத சூழலில், 5 மாத கால வீட்டு வாடகையை தரமுடியாமல், 28 ஆயிரம் ரூபாய் நிலுவை வைத்திருக்கிறார்.
மறை.பச்சையப்பனின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு 2013-ல் குறைந்த வாடகைத் திட்டத்தில் அரசு வீடு ஒதுக்கியது. ஆனால் அதையும் கட்ட முடியாத சூழலால், கடந்த ஜனவரியில் இருந்து வாடகை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே உள்ள வாடகை நிலுவைத்தொகையை வீட்டு வசதி வாரியத்துக்கு செலுத்த முடியாமல் தவிக்கிறது இவரது குடும்பம்.
இன்றும் வ.உ.சி மன்றம், பிற அமைப்புகள் மறைமலை அடிகள் தொடர்பாக நடத்தும் நிகழ்வில் பங்கேற்கிறார் மறை.பச்சையப்பன். தனக்கு அரசு வேலை கோரி 30 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த இவர், தற்போது மகனுக்கு வேலை நிரந்தரம் செய்து, தனது குடும்பத்துக்கு உதவிகள் கிடைக்குமா என்று எதிர்பார்த்திருக்கிறார்.