இந்தக் கொரோனா காலக்கட்டம், மாணவர்கள் பள்ளிக்குச் சென்று படிக்கும் நேரடி கல்விமுறையை பாதித்துள்ள சூழலில், கிராமப்புற மாணவர்களுக்காக, இலவச மாலை நேர வகுப்புகளை நடத்திவருகிறார்கள் இளைய தலைமுறையினர்.
கடந்த 2 ஆண்டுகாலமாக கொரோனா சூழலால் மாணவர்கள் கவனச்சிதறலுக்கு ஆளாகி சரிவர படிக்கமுடியாமல் திணறும் நிலையை பரவலாக காணமுடிகிறது. இந்த நிலையை மாற்றும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர் மதுரை அருகே காயம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளம் பட்டாளங்கள்.
பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய, எளிய கூலித்தொழிலாளர்களின் பிள்ளைகள் சரிவர படிக்கமுடியாத நிலையை கண்டு மனம்வருந்திய கிராமத்து பட்டதாரி இளைஞர்கள் ஒன்றிணைந்து கிராமத்து மந்தையில், இலவச மாலை நேர வகுப்புகளை நடத்திவருகிறார்கள். ஆரம்பப்பள்ளி மாணவர்கள் தொடங்கி, பிளஸ்டூ மாணவர்கள் வரை இவர்கள் பாடம் நடத்துகிறார்கள்.
மாணவர்கள் சோர்வடையாமல் இருக்க தினசரி வகுப்பில், சத்துள்ள நவதானியங்கள், சிறுதானியங்கள், முட்டை போன்ற உணவு பொருட்கள் வழங்கி ஊக்குவிக்கிறார்கள். இவர்களின் முயற்சி, கிராமத்து பெற்றோர்களிடையே வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
பணிக்கு சென்றுவிட்டு வீட்டில் இருக்கும் நேரத்தை தங்களின் கிராமத்து மாணவர்களின் கல்விக்காக செலவிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியும் மன நிறைவையும் தருவதாக கூறும் இந்த இளைஞர்கள் பள்ளிகள் திறந்தாலும்கூட மாலை நேர வகுப்புகளை தொடர உள்ளதாக கூறுகிறார்கள்.