மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, ஐம்பதாண்டுகளுக்கு முன் கட்டித்தரப்பட்ட ஓட்டு வீடுகள் இடிந்துவிழும் நிலையில் இருப்பதால் அச்சத்துடனேயே வாழ்வதாக குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர்.
மதுரை மாவட்டம் கஸ்பா முதலைக்குளம் பகுதியில் இடிந்து விழும் மண் சுவர்கள், நிமிர்ந்து செல்லமுடியாத அளவுக்குத் தாழ்வான நுழைவாசல், அடிக்கடி விழும் ஓடுகளோடு காணப்படும் 31 குடியிருப்புகள், 50 ஆண்டுகளுக்கு முன் தாட்கோ சார்பில் பட்டியலின மக்களுக்காக கட்டித்தரப்பட்டவை. இந்த வீடுகளின் தற்போதைய நிலை, காண்பதற்கே அச்சம்தரும் நிலையில் உள்ளது. அவற்றில் வசிப்பவர்கள் உயிர்பயத்துடனேயே நாட்களை கடத்துகின்றனர். எத்தனையோ அதிகாரிகள் வந்துபார்த்தும் நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கவில்லை என்று கூறுகின்றனர்.
வீடு எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்தோடு வாழ்ந்து வரும் இந்த மக்களின் குறைகளை தீர்த்து, பாதுகாப்பான கான்கிரீட் வீடுகளை மாவட்ட நிர்வாகம் கட்டித்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர் கஸ்பா முதலைக்குளம் கிராம மக்கள்.