மதுரை மாவட்டம் பேரையூர் அருகே இளங்கோவன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவத்தை விசாரிக்க சென்ற காவல்துறையினர், 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
சாப்டூரை அடுத்துள்ள சலுப்பபட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது தோட்டத்தில் வேலை பார்த்த மதுரை துவரிமானைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் மர்மான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தோட்ட உரிமையாளரான பாண்டியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது தோட்டத்தில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. 500 மற்றும் 200 ரூபாய் தாள்கள் என சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய கள்ள நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஒரு இடத்தில் கள்ள நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. கள்ளநோட்டு கும்பலுக்கு இடையேயான தகராறில் தோட்ட பணியாளர் இளங்கோவன் கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.