கொரோனா தடுப்பூசி முகாம்களை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால், நவம்பர் மாத இறுதிக்குள் நூறு சதவிகிதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும் என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் ஏழாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னை - அடையாறு கஸ்தூரிபாய் நகரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 73 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், சென்னையில் 87 சதவிகிதம் முதல் தவணையும், 48 சதவிகிதம் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். கடந்த 3 மாதங்களில் தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.