கருணாநிதிக்கு பேனா சின்னத்தை எதிர்ப்பவர்களின் DNA-ஐ பரிசோதிக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தி.மு.கவின் தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் மதிப்பில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
அதில், கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்த நவீன ஒளிப்படங்களும் அந்த நினைவிடத்தில் அமைய உள்ளது. இந்த நிலையில், நடுக்கடலில் 134 அடி உயரத்திற்கு கருணாநிதிக்கு பேனா வடிவில் 80 கோடி ரூபாயில் நினைவுச் சின்னம் வைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதற்கு அரசியல் கட்சியினரிடையே பல தரப்பட்ட கருத்துகளும் விமர்சனங்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்தை நிறுவ அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியிருந்தார்.
இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்துள்ளார். அதில், கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைப்பதை வரவேற்கிறோம். அதில் எந்த தவறும் இல்லை எனக் கூறியுள்ளார். மேலும், கருணாநிதிக்கு பேனா வடிவிலான நினைவு சின்னம் வைக்க வேண்டாம் என்று கூறுபவர்களின் மரபணுவை பரிசோதிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.