கேரளாவில் மலை இடுக்கில் சிக்கி 43 மணிநேரத்திற்கு மேல் தவித்த இளைஞரை, நீண்ட போராட்டத்திற்குப் பின், மீட்புப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
பாலக்காடு மாவட்டம் மலம்புழாவைச் சேர்ந்த பாபு என்பவர், கடந்த 7ஆம் தேதி அவரது நண்பர்களுடன், மலையேற்றத்திற்காக, குரும்பச்சி மலைக்குச் சென்றுள்ளார். மலையேற்றத்தின்போது நடுவழியில் கால் இடறியதில் பாபு, உருண்டு விழுந்து மலை இடுக்கில் இருந்த சிறிய குகையில் சிக்கிக் கொண்டார். நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தீயணைப்புப் படையினர் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
இடுக்குப்பகுதி என்பதால் கடற்படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது. உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வந்த பாபுவை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்த சூழலில், கேரள முதல்வர் பினராயி விஜயன் ராணுவத்தின் உதவியை நாடினார்.
இதையடுத்து வெலிங்டன் ராணுவ மையம் மற்றும் சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து வீரர்கள் மலைப்பகுதிக்கு விரைந்தனர். மேலும் பெங்களூருவிலிருந்து பாராசூட் படை வீரர்களும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சென்னையைச் சேர்ந்த கருடா நிறுவனத்தின் ட்ரோன்களும், மீட்புப் படையில் ஈடுபட்டது. இந்நிலையில், நீண்ட போராட்டத்திற்குப் பின், பாபுவை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். மலைப்பகுதியில், கயிறு கட்டி இறங்கிய வீரர்கள், பாபுவை தூக்கி மலை உச்சிக்கு கொண்டு வந்தனர். பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக, கொண்டு செல்லப்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளார்.
பாபு சற்று சோர்வுடன் இருந்தாலும், அவர் நலமுடன் இருப்பதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். தன்னை பத்திரமாக மீட்ட ராணுவத்தினரை முத்தமிட்டு இளைஞர் பாபு நன்றி தெரிவித்தார். பாபுவை பத்திரமாக மீட்க உதவிய அனைவருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.