கரூர் மாவட்டத்தில் கடந்த ஆட்சியில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளுக்கு நகைகள் திருப்பித்தராமல் உள்ளதால் அடுத்த சாகுபடிக்கு கடன்பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கும் நிலை உள்ளதாக கூறுகிறார்கள்.
கடந்த அதிமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் தமிழகம் முழுவதும் விவசாய கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்றிருந்த நகைக் கடன்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள 83 கூட்டுறவு கடன் சங்கங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், அரசு அறிவித்தபடி பெரும்பாலான விவசாயிகளின் நகைக் கடன்கள் ரத்து செய்யப்பட்டு அதற்கான சான்றுகளும் வழங்கப்பட்டன. ஆனால், பயிர் கடனுக்காக விவசாயிகள் அடகு வைத்த நகைகள் இன்னும் திருப்பித் தரப்படாமல் இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.