சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் கலைஞர் அரங்கம் அமைவது அதிமுகவுக்கு கசக்கிறது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூலகம் அமைப்பதற்காக, பென்னிகுயிக் நினைவில்லத்தை இடிப்பது கண்டிக்கத்தக்கது என அதிமுக வெளியிட்டிருந்த அறிக்கை, அறியாமைகளின் தொகுப்பு எனக் குறிப்பிட்டுள்ளார். கலைஞர் நூலகத்திற்காக 7 இடங்கள் பார்வையிட்டு, இறுதியாக மதுரை நத்தம் சாலையில் அமைந்துள்ள நீர்வள ஆதாரத்துறையின் பொறியாளர்கள் குடியிருப்பு வளாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த இடம் பென்னிகுயிக் வாழ்ந்ததாகக் கூறி, அதிமுக திடீரென ஒரு புரளியை கிளப்பி விடுவதாகவும் அமைச்சர் வேலு கண்டித்துள்ளார்.
மதுரைக்கு வரும் நூலகத்தை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கில், அதிமுக மலிவு அரசியலை நடத்துவது அப்பட்டமாக வெளிப்படுகிறது எனவும் அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்துள்ளார்.