பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை வேண்டும் என கோரி இத்தாலியில் இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் , கவன ஈர்ப்பு மாநாடு நடத்தியுள்ளனர்.
புவி வெப்பமயமாதலால் பல இயற்கை பேரிடர்களை சந்திக்க போகிறோம் என ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக நவம்பர் 1ஆம் தேதி கிளாஸ்கோ நகரில் COP26 என்ற தலைப்பில் உலக தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. பிரிட்டன் மற்றும் இத்தாலி அரசுகள் இணைந்து இந்த மாநாட்டை நடத்த உள்ளன. இந்த மாநாட்டில் தீர்க்கமான முடிவுகளை உலக தலைவர்கள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இத்தாலியின் மிலன் நகரில் YOUTH4CLIMATE என்ற மாநாடு நடைபெற்று வருகிறது. 190 நாடுகளை சேர்ந்த சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுத்துவரும் 400 இளைஞர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
COP26 மாநாட்டில் முக்கியமாக என்னென்ன அம்சங்களை விவாதிக்க வேண்டும் என அவர்கள் வரையறுத்துள்ளனர். மேலும், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் இத்தாலி பிரதமரிடம் வழங்கியுள்ளனர். முன்னதாக YOUTH4CLIMATE மாநாட்டில் காணொலி வாயிலாக பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உலக நாடுகள் நிலக்கரி பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து கோடிக்கணக்கான மரக்கன்றுகளை நட வேண்டும் என கூறினார். இளைஞர்கள் புவி வெப்பமயமாதலை தடுக்க வேண்டும் என தங்கள் நாட்டு தலைவர்களுக்கு தொடர்ந்து வலியுறுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார். நவம்பர் மாதம் கிளாஸ்கோவில் நடக்கும் மாநாடு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.