வேதாரண்யத்தில் உள்ள கோடியக்கரை சரணாலயத்தியில் சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே, வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் சரணாலயத்திற்கு வருவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு, வழக்கத்தை விட முன்னதாகவே பறவைகளின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ரஷ்யாவிலிருந்து மூக்கு உள்ளான், சிவப்புகால் உள்ளான் போன்ற உள்ளான் இன பறவைகள் சரணாலத்திற்கு படையெடுத்துள்ளன.
பிளம்பிங்கோ, செங்கால்நாரை, கூழைக்கிடா, கடல்காகம், கடல்ஆலா, போன்ற வெளிநாட்டு பறவைகளும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ளன. கோவைத்தீவு, சிறுதலைக்காடு உள்ளிட்ட இடங்களிலும், சதுப்பு நிலங்களிலும் பறவைகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. மும்பை பறவைகள் ஆராய்ச்சி மையத்திலிருந்து வந்தவர்கள், பறவைகளின் வரத்து குறித்து கோடியக்கரையில் ஆய்வு செய்து வருகின்றனர்.