"புவி வெப்பமயமாதல் எங்களுக்கு மரண தண்டனை" – ஐநா சபையில் தீவு நாடுகள் குமுறல்

"புவி வெப்பமயமாதல் எங்களுக்கு மரண தண்டனை" – ஐநா சபையில் தீவு நாடுகள் குமுறல்
"புவி வெப்பமயமாதல் எங்களுக்கு மரண தண்டனை" – ஐநா சபையில் தீவு நாடுகள் குமுறல்
Published on

பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுக்காமல் வளர்ந்த நாடுகள் தங்களுக்கு மரண தண்டனை வழங்குவதாக தீவு நாடுகளின் தலைவர்கள் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கடுமையாக சாடியுள்ளனர்.

2018 - தரவுப்படி புவி வெப்பமயமாதலை உலகம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய சவால். பனிப்பாறைகள் உருகுவது, கடல்நீர்மட்டம் அதிகரிப்பது , பெருவெள்ளம், காட்டுத்தீ, கடுமையான வறட்சி போன்ற இயற்கை பேரிடர்கள் இனி அடிக்கடி நிகழும் என அண்மையில் ஐநா வெளியிட்ட பருவநிலை மாற்ற பாதிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மனித குலத்திற்கு விடப்படும் ரெட் அலர்ட் என்றும் எச்சரித்துள்ளது.

பருவநிலை மாற்ற பாதிப்புகளின் விளைவுகளை முதலில் எதிர்கொள்ள இருப்பவை தீவு நாடுகள். உதாரணத்திற்கு மாலத்தீவை எடுத்து கொள்ளலாம். உலகின் தாழ்வான தீவு நாடு. இங்குள்ள 80 விழுக்காடு தீவுகள் கடல் மட்டத்தில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில் தான் இருக்கின்றன. கடல் நீர்மட்டம் உயர்வதால் சில ஆண்டுகளில் மாலத்தீவே மூழ்கி விடும் அபாயம் உள்ளது. கிட்டதட்ட 50 தீவு நாடுகளின் நிலைமை இது தான். எனவே நடப்பு ஐநா பொதுசபை கூட்டத்தில் தீவு நாடுகளின் தலைவர்கள் புவி வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

மார்ஷெல் தீவுகளின் அதிபர் டேவிட் கபாவு ஐநா பொதுசபை கூட்டத்தில் காணொலி வாயிலாக உரையாற்றிய போது வளர்ந்த நாடுகள் கால தாமதம் செய்யக்கூடாது. ஏனெனில் தப்பித்துச் செல்ல ஒரு உயரமான இடம் கூட எங்களுக்கு இல்லை என கூறினார். 2030ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்ற அளவை 50 விழுக்காடாகவும், 2050ஆம் ஆண்டுக்குள் பூஜ்யம் என்ற அளவையும் எட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். வளர்ந்த நாடுகள் தங்களுக்கு மரண தண்டனை கொடுத்திருப்பதாக மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி சாடினார். கயானா (GUYANA)  நாட்டு அதிபர் இர்ஃபான் அலி, புவி வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கொரோனா பெருந்தொற்றை விட அதிக உயிர்களை இழப்போம். எனவே வளர்ந்த நாடுகள் வாக்குறுதி அளித்தபடி கரியமில வாயு வெளியேற்றத்தை நிறுத்த வேண்டும் என்றார்.

சுரினேம் (Suriname) அதிபர் சன் சண்டோகி (Chan Santokhi) ஆற்றிய உரையில் வேறொருவர் வெளியிடும் கார்பனுக்கான நாங்கள் எங்கள் உயிரை கொடுக்கிறோம். இது அநீதி என கூறியுள்ளார். பலவ் (Palau) அதிபர் சுரங்கல் விப்ஸ் (Surangel Whipps) ஏற்கனவே நேரம் கடந்து விட்டது என்பதை இப்போதாவது உணருங்கள் என தெரிவித்துள்ளார்.

தொழிற்புரட்சி பரவலாவதற்கு முன்பிருந்ததை விட பூமியின் வெப்பநிலை அதிகரித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஆலைகளில் இருந்து வெளியேறும் கரியமில வாயு. இதனை உட்கிரகிக்க போதுமளவு காடுகளும் இல்லை. 2018ஆம் ஆண்டு தரவுப்படி உலகிலேயே சீனா தான் ஆண்டுக்கு 11 ஆயிரம் மெகாடன் கரியமில வாயுவை வெளியிடுகிறது. 5 ஆயிரம் மெகா டன் கரியமில வாயு வெளியேற்றத்துடன் அமெரிக்கா இந்த பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது. சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் ஏற்கனவே உறுதி அளித்தபடி கரியமில வாயு வெளியேற்ற அளவை குறைக்கவில்லை இதுவே புவி வெப்பமயமாதலுக்கு வித்திடுகிறது. இந்நிலையில் தீவு நாடுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க ஐநா பொதுசபை கூட்டத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி கொண்டுள்ளன. அடுத்த மாதம் COP26 என்ற பருவநிலை உச்சி மாநாடு கிளாஸ்கோவில் நடைபெற உள்ளதால் அதில் பல முக்கிய அறிவுப்புகள் வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com