ரஷ்யா - உக்ரைன் மோதல், ஹாங்காங், தைவான், திபெத் மீதான சீன நடவடிக்கைகளுக்கு மத்தியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன.
குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறும் காலத்திற்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்தபோதுதான், கிரீமியாவை ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்தது. சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நேரத்தில், ரஷ்யவசமாகியிருந்தது கிரீமியா.
தற்போது பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ள நிலையில், உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவம் தயாராக அணிவகுத்து நிற்கிறது. எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் புகுந்துவிடும் என்ற நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் முடியும்போது நிலைமை எப்படியிருக்கும் எனத் தெரிய வரும். போட்டியை நடத்தும் சீனாவோ, ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிரான போராட்டங்கள், தைவானின் எதிர்ப்புகள், திபெத்தின் கொந்தளிப்பு ஆகியவற்றை ஒடுக்குவதில் ஈடுபடத் தயாராகி வருகிறது.
சீன உயரதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய சீன ஒலிம்பிக் வீரர் பெங் ஷுகாய் இருக்குமிடம் தெரியவில்லை. குளிர்கால ஒலிம்பிக்கில் அவர் பெயர் இடம்பெறாத நிலையில், அவரது நிலை பற்றி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு இணையாக போர் மேகங்கள், அரசவாத அடக்குமுறை மறுபுறம் விளையாடிக் கொண்டிருக்கிறது.