குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை நேரில் பார்த்து வீடியோ எடுத்த நாசர் என்பவர், தான் கண்ட காட்சியை விவரித்துள்ளார்.
குன்னூரை அடுத்த காட்டேரி பகுதியில் 8-ஆம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
விபத்தை நேரில் பார்த்து வீடியோ எடுத்த நாசர் என்பவர் இதுகுறித்து கூறுகையில், ‘’சத்தமாக ஹெலிகாப்டர் பறந்ததைப் பார்த்து அதை வீடியோ எடுத்தோம். ஆனால் வீடியோ எடுத்த சில நொடிகளிலேயே ஹெலிகாப்டர் கீழே விழுந்தது. ஹெலிகாப்டர் விழுந்த இடத்தை நோக்கி சென்ற நாங்கள், இதுகுறித்து தகவலறிய உதவியாக இருக்கும் என்று எண்ணி மீட்புப் பணியிலிருந்த காவலரிடம் வீடியோவை பகிர்ந்தோம்.
சரியாக நண்பகல் 12.24 மணிக்கு விபத்து நேர்ந்தது. பனிமூட்டத்திற்குள் சென்ற அடுத்த நொடியே ஹெலிகாப்டர் மரத்தில் மோதியது. பயங்கர சத்தத்துடன் ஹெலிகாப்டர் விழுந்ததால் பதற்றமடைந்தோம்’’ என்று கூறியுள்ளார்.