கனவு காணுங்கள் எனக்கூறி மறைந்த பின்பும் இளைஞர்களின் உந்துசக்தியாக திகழ்பவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். உலகமே உற்றுநோக்கிய தமிழரான அவரது 6-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில் ஒரு படகோட்டியின் மகனாக 1931-ஆம் ஆண்டு பிறந்தார் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல்கலாம். சிறு வயதிலேயே வறுமையை எதிர்கொண்ட அவர், பள்ளி கல்விக்கு இடையில் சைக்கிளில் சென்று செய்தித்தாள்கள் விநியோகம் செய்து வந்தார். எனினும் படிப்பு மீதான கவனம் மட்டும் சிதறவில்லை. சென்னை எம்.ஐ.டி.யில் விண்வெளி பொறியியல் படிப்பு முடித்த அவர் நாட்டிற்கான அறிவியலை நோக்கி தனது அறிவை செலுத்தினார்.
விண்வெளி, தேச பாதுகாப்பு, அணு ஆற்றல் என 3 துறைகளிலும் ஒருசேர உழைத்த விஞ்ஞானி. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் பதவி வகித்தார். அப்போது பல ஏவுகணைகளை பறக்கவிட்டு உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை தலைநிமிரச் செய்தார். இதனால் ஏவுகனை நாயகன் என அழைக்கப்பட்டார்.
அப்துல்கலாம், இளைஞர்களிடம் ஏற்படுத்திய உற்சாகமும் தாக்கமும் மற்ற தலைவர்களில் இருந்து பெரிதும் மாறுபட்டது. கனவு காணுங்கள் எனக்கூறி ஒவ்வொரு இளைஞரின் மனதிலும் நம்பிக்கை விதையை விதைத்தார். விஞ்ஞானியாக இருந்து 2002ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவரான பின்பும் மாணவர்களிடம் உரையாற்றுவதை பெரிதும் விரும்பினார்.
கலாமின் இறுதி நாளும் அவர் விரும்பிய மாணவர்கள் முன்பு முடிவுபெற்றது. 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து காலமானார். பின்னர் சொந்த ஊரான பேக்கரும்பில் கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.