அண்மை காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேர மின்தடை அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, மதுரவாயல் போன்ற பல்வேறு பகுதிகளில் இரவு நேர மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான கள்ளிகுப்பம், மேனாம்பேடு, புதூர் பானுநகர், லெனின் நகர், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதாக பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், உரிய நடவடிக்கை எடுக்காததால் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே ஆத்திரமடைந்த பொதுமக்கள் கள்ளிகுப்பம் அருகே அம்பத்தூர் செங்குன்றம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டர். இதனால் அப்பகுதி போராட்டக் களமாக காட்சியளித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதை ஏற்க மறுத்த பொதுமக்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மின்சாரம் தடைபட்டதால் வெயிலின் வெப்பம் காரணமாக தூங்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். அம்பத்தூரில் தொடர்ந்து ஏற்படும் இரவு நேர மின்வெட்டை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒன்று திரண்ட பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்பத்தூர் பிரதான சாலை போராட்டக் களம் போல் காட்சியளித்தது. பின்னர் படிப்படியாக ஒவ்வொரு பகுதியிலும் மின் சேவை வழங்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது