ரூ.1 கோடி வரி ஏய்ப்பு செய்தாரா கூலித்தொழிலாளி? -அதிர்ந்துபோன கிராமம்

ரூ.1 கோடி வரி ஏய்ப்பு செய்தாரா கூலித்தொழிலாளி? -அதிர்ந்துபோன கிராமம்
ரூ.1 கோடி வரி ஏய்ப்பு செய்தாரா கூலித்தொழிலாளி? -அதிர்ந்துபோன கிராமம்
Published on

தோல் தொழிற்சாலையில் கூலி வேலை செய்யும் பெண் ஒரு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக அதிகாரிகள் குற்றஞ்சாட்டியது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அப்பெண்ணின் ஆதார், பான் எண் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி சிலர் மோசடி செய்ததை அறிந்த அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சிறிய கிராமமான மிடாள‌த்தில் குடிசை வீட்டில் வசிப்பவர் 50 வயதான கிருஷ்ணவேணி. அருகிலுள்ள காலணி தொழிற்சாலையில் கூலி வேலை செய்கிறார். கணவர் மற்றும் மகன்களும் கூலி வேலை செய்கின்றனர். கடந்த 31ஆம் தேதி வேலூரிலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கிருஷ்ணவேணியின் வீட்டுக்குச் சென்றனர். அப்போது கிருஷ்ணவேணி வீட்டில் இல்லை. ஜீப்பில் வந்த அதிகாரிகள், கிருஷ்ணவேணி சென்னை தாம்பரம் அருகே தோல் மற்றும் காப்பர் விற்பனை நிறுவனம் நடத்தி வருவதாகவும் ஒரு கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் சராமாரியாக குற்றஞ்சாட்டினர். சுற்றி நின்ற கிராமத்தினர் அதைக் கேட்டு அதிர்ந்து போனார்கள். கூலி வேலை செய்யும் பெண் எப்படி கம்பெனி நடத்த முடியும் என கிருஷ்ணவேணிக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் கிராமத்தினர் முறையிட்டனர். பின்னர் அங்கு வந்த கிருஷ்ணவேணி, தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

இதைக்கேட்ட அதிகாரிகள் குழம்பிப் போய் நின்றிருந்தனர். உடனே கிருஷ்ணவேணி சமயோசிதமாக யோசித்து தங்கள் கிராமத்தை சேர்ந்த ஆம்பூர் எம்எல்ஏவிடம் பேசி அதிகாரிகளிடம் உண்மையை விளக்க கூறியுள்ளார். எம்எல்ஏ வில்வநாதன் அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசி கிருஷ்ணவேணி கூலித் தொழிலாளிதான் என்றும் அவர் தொழில் நிறுவனம் நடத்தவில்லை என்றும் உறுதிபட கூறினார். இதன் பின்பே கிருஷ்ணவேணியின் ஆதார், பான் எண்ணை பயன்படுத்தி யாரோ சிலர் மோசடி செய்தது அம்பலமானது.

பின்னர் மோசடி நிறுவனத்துடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என கிருஷ்ணவேணியிடம் கடிதம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். கிருஷ்ணவேணியின் பெயரை பயன்படுத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் இன்னொரு பரிதாபம் என்னவென்றால் அதிகாரிகள் கிருஷ்ணவேணியிடம் விசாரணை நடத்தியதால் அவரை தொழிற்சாலை நிர்வாகம் வேலையிலிருந்து நீக்கிவிட்டது. இந்த சோகத்திற்கு இடையே கிராமத்தவர்கள் பலர் உங்கள் தொழிற்சாலையில் எங்களுக்கு வேலை தருவீர்களா என தன்னிடம் நகைச்சுவையாக கேட்பதாகவும் கூறுகிறார் கிருஷ்ணவேணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com