தீபாவளி பண்டிகைக்கு அசைவ பிரியர்கள் இறைச்சி உணவை விரும்பும் நிலையில், அமாவாசை என்பதால் விற்பனை குறைவாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தீபாவளி தினத்தன்று புத்தாடைகள் உடுத்துவது, வெடி வெடிப்பது போன்று அசைவ உணவுகள் உண்பதையும் மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், இந்த தீபாவளி பண்டிகையோடு மகாவீர் ஜெயந்தியும் வந்துள்ளதால் சென்னை மாநகராட்சி இறைச்சி கடைகளை திறக்க தடை விதித்தது. இதையடுத்து பொதுமக்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை தொடர்ந்து இறைச்சி கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது.
ஜெயின் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளாக சௌக்கார் பேட்டை, கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இன்று தீபாவளி பண்டிகையோடு மகாவீர் ஜெயந்தி, அமாவாசை போன்ற நிகழ்வுகளாலும், சென்னையில் வசிக்கும் மக்கள் வெளியூர்களுக்குச் சென்றதாலும் இறைச்சி விற்பனை மிகவும் மந்தமாக இருப்பதாக இறைச்சி கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.