மூலப்பொருட்களின் கடும் விலையேற்றத்தால் தவித்து வரும் கோவை ஜவுளித்துறையினர், மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் இறக்குமதி பஞ்சுக்கான 11 சதவிகித வரியை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கின்றனர்.
பருத்தி மற்றும் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி எனப்படும் பஞ்சு கொள்முதல் விலை, 78 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. பஞ்சு விலையை அடிப்படையாகக் கொண்டு நூல் விலையும் உயர்த்தப்படுகிறது. நூல் விலை உயர்ந்திருந்தாலும் ஏற்கெனவே எடுத்த ஆர்டர்களுக்கு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள விலைக்கே ஜவுளி ரகங்களை உற்பத்தி செய்து நஷ்டத்தில் கொடுக்க வேண்டியுள்ளதால் ஆர்டர்களை தக்க வைத்துக்கொள்ள சிரமப்படுவதாக வருந்தும் ஜவுளித்துறையினர், இதே நிலை தொடர்ந்தால் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு வந்து சேரவேண்டிய ஆர்டர்கள் போட்டி நாடுகளான வங்கதேசம், சீனா, வியட்நாம், மியான்மருக்கு சென்றுவிடும் என்கின்றனர். கடந்த நிதிநிலை அறிக்கையில் பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 சதவிகித வரியை ரத்துசெய்ய கோருகின்றனர் ஜவுளித்துறையினர்.
வெளிநாடுகளுக்கு பஞ்சு ஏற்றுமதியை தடை செய்து, ஜவுளித் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே இந்திய பருத்தி கழகம் பஞ்சு வழங்க வேண்டும், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்களில் தேவைப்படும் வரி விலக்குகள், வரி குறைப்பு நடவடிக்கைகள் குறித்தும் இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் கோடி அளவுக்கு ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு, அதிக அளவில் அந்நிய செலவாணி கிடைக்கிறது. தற்போது வரலாறு காணாத மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்பை உணர்ந்து ஆர்டர்களை தக்க வைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகின்றனர் ஜவுளித்துறையினர்.